அரிசி மாவு இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள ரவை, அரிசி மாவைப்பயன்படுத்தி ஹோட்டல் ஸ்டைலில் ரவா தோசை 10 நிமிடங்களில் செய்து விடலாம்.


காலை உணவிற்கு இட்லி, தோசையை மிஞ்சும் அளவிற்கு வேறு ரெசிபி எதுவும் இல்லை. அதுவும் மொறுமொறுப்பாக தோசையும், பூ போல் இட்லியும் செய்து அதற்கு ஏற்ற சட்னி வகைகளை வைத்து சாப்பிட்டால் கொஞ்சம் எக்ஸ்டரா சாப்பாடு உள்ளே போகும். அந்தளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. மேலும் சுலபமாக சமையலை முடிக்கவேண்டும் என்றாலும் இட்லி, தோசையை ரெபர் பண்ணுவோம்.  ஒரு வேளை உங்களது வீட்டில் தோசை மாவு இல்லாத போது, விருந்தாளிகள் திடீரென வந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் இனி வேண்டாம். சுவையாகவும், மிக சுலபமாகவும் வீட்டில் இருக்கும் ரவை மற்றும் அரிசி மாவைப் பயன்படுத்தி ரவா தோசை செய்யலாம்.. அதனை எப்படி செய்யலாம்னு இங்க தெரிந்துக்கொள்ளலாம்



ரவா தோசை செய்யும் முறை:


தேவையானப் பொருள்கள்:


ரவை – ஒரு கப்


அரிசி மாவு – ¼ கப்


தயிர் – ¼ கப்


உப்பு – 1 டீஸ்பூன்


தண்ணீர் – 2 1/2 கப்


பொடித்த மிளகு – 10


பச்சை மிளகாய் – 2


இஞ்சி – தேவையான அளவு


வெங்காயம் – 2


எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:


முதலில் ரவா தோசை செய்வதற்காக எடுத்து வைத்துள்ள ரவை, அரிசி மாவு, தயிர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மொத்தமாக மிக்ஸியில் இந்தப் பொருள்களையெல்லாம் போட்டு ஒரு சுற்று சுற்றினால் போதும் கட்டியில்லாமல் மாவு எளிதில் கரைந்துவிடும். தோசை மாவை விட நீரும் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பின்னர் கரைத்த மாவுடன் மிளகு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்துக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து தோசை தவாவில் பரவும் தீயை இதற்கு கூட்டியே வைத்திருக்க வேண்டும். இப்போது ஒரு கரண்டி மாவை சுற்றி ஊற்றினால் தோசைக்கல் முழுவதும் தானாக பரவிக்கொள்ளும்.


இறுதியில் தோசைக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்துப் பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு மொறுமொறுவென வெந்த பின் திருப்பிப் போட வேண்டும். இப்போது ஹோட்டலில் சாப்பிடும் ரவா தோசை ரெடியாகிவிட்டது. இதற்கு தக்காளி சட்னி, சாம்பார், தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் இன்னும் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். நீங்களும் ஒருநாள் இந்த ரெசிபியை ஒரு முறை உங்களது வீட்டில் செய்துபாருங்கள்.