காஃபி பிரியர்கள் சென்று பார்வையிடக்கூடிய இந்தியாவின் முக்கியமான காஃபித் தோட்டங்கள் எவை என பார்க்கலாம். வரும் குளிர்காலத்தில் விடுமுறையை கழிக்க ,வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோர் மலைப் பிரதேசங்களை நாடிச் செல்வர். அந்த வகையில் மலைப் பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டங்களை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய உற்பத்தி துறையில் பெருமளவு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் முன்னணி காஃபி தோட்டங்கள் எவை என பார்க்கலாம். இந்தியாவில் தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர்ப் பகுதிகளிலேயே காஃபி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
தென்னிந்தியாவின் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் அதிகளவான காபி தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்திய மலைச் சாரல்களில் விளையும் காபிக் கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாக கருதப்படுகிறது.
வருடத்தில் மொத்தமாக 8200 டன் காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் கேரளாவில் 21%, கர்நாடகத்தில் 71% , தமிழகத்தில் 5 சதவீதமும் உற்பத்தியாகிறது.
இந்தியாவைப் பொறுத்த அளவில் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் காப்பி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காபியில் 80 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றும் வழி செய்யப்படுகிறது.
கூர்க், கர்நாடகா:
ஏராளமான ஏரிகள், பசுமையான மலைப் பிரதேசங்கள், வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் சூழப்பட்ட அழகான மலைப்பகுதி தான் கர்நாடகாவில் கூர்க். காபி உற்பத்தி துறையில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் கர்நாடகாவின் கூர்க், ரோபஸ்டா மற்றும் அரபிகா வகை காஃபிக்கு புகழ்பெற்றதாகும்.
இந்திய அளவில் காபி உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் கூர்க்கில் விளைகிறது. இது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கை வகைக்கிறது. காபி பிரியர்கள் நவம்பர் மாதத்தில் இந்த மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் போது காஃபி அறுவடை செய்வதை காணமுடியும். அதேபோல் கூர்க் செல்லும்போது அபே நீர்வீழ்ச்சி, பைலகுப்பேயின் மினி திபெத், விராஜ்பேட் மற்றும் மண்டல்பட்டி போன்ற இடங்களை பார்வையிட முடியும்.
சிக்மகளூர், கர்நாடகா:
கர்நாடகாவின் காபி தேசம் என்று அழைக்கப்படும் சிக்மகளூர் காபி பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிற்கு காபியை அறிமுகப்படுத்தியபோது, அது சிக்மகளூரில் இருந்துதான் தொடங்கியது என கூறப்படுகிறது. இங்கிருந்துதான் அதிகளவான காபியும் உற்பத்தி செய்யப்படுகிறது. சிக்மகளூரில் காபி தோட்டங்களை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இயற்கை சூழல் நிறைந்த தங்கும் விடுதிகளில் ஓய்வு எடுக்கலாம். காபி தோட்டங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சுவையான காபிகளையும் ருசித்துப் பார்க்கலாம்.
பழனி மலை, தமிழ்நாடு:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பழனி மலைப் பகுதிகளில் காபி தோட்டங்கள் நிறைந்துள்ளன. பழனி மலை பகுதியை ஒட்டிய பகுதியில் காபியுடன், அவகோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட், மிளகு மற்றும் எலுமிச்சை தோட்டங்களுக்கு புகழ்பெற்றது. இங்குள்ள ராஜாக்காடு எஸ்டேட்டில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஹோட்டலில், புதிதாக அரைத்த காபியை சுற்றுலா பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் .
வயநாடு, கேரளா:
பல்வேறு வகையான இயற்கை சூழலால் நிரம்பப் பெற்றது தான் கேரளாவின் வயநாடு பகுதி.
அழகான காபி தோட்டங்களைக் கொண்ட வயநாடு பகுதி பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. நவம்பர் டிசம்பர் மாதங்களில் வயநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு காபி விதை அறுவடை செய்வதை நேரில் கண்டு களிக்கலாம். அதேபோல் இங்கு வகை, வகையான ,வெளிநாடுகளில் இருந்து வரும் பறவை இனங்களையும் பார்த்து ரசிக்கலாம். வயநாடு பகுதியில் உள்ள சுமார்
8,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எடக்கல் குகைகளில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிடலாம்.
அதேபோல் அங்குள்ள குருவா தீவு ஆற்றில் ராஃப்டிங் செல்லலாம். வயநாட்டில் காணப்படும் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.
சிக்கல்தாரா, மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் உள்ள சிக்கல்தாரா காபி தோட்டம் புனேவிலிருந்து 600 கிமீ தொலைவில் உள்ளது. அமராவதியின் அழகான ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகள், வரலாற்று இடங்கள்,பழைய கோட்டைகளை பார்வையிடலாம். அதேபோல் சிக்கல்தாரா பறவை பிரியர்களுக்கு ஒரு சொர்க்கமாகும் என கூறப்படுகிறது.
அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்:
அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அழகிய மலைவாசஸ்தலமாகும். கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே காபி சாகுபடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதல் ஆர்கானிக் காபி என்று கூறப்படும் அரக்கு எமரால்டு என்ற சொந்த பிராண்டை உள்ளூர் பழங்குடியினர் தமது அடையாளமாக வைத்துள்ளனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த பழங்குடியின மக்களிடம் உள்ள புகழ்பெற்ற ஆர்கானிக் காபியை வாங்கி சுவைத்து அனுபவிக்கலாம். அதேபோல் ஆந்திரப் பிரதேசத்தில் சிந்தப்பள்ளி, படேரு மற்றும் மரேடுமில்லி பகுதிகளில் நன்கு தரம் வாய்ந்த காபி உற்பத்தி செய்யப்படுகிறது