இயற்கையாகவே காடுகளில் கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலிகை வகைகளில் ஒன்று தான் இந்த முடக்கத்தான் கீரை. இந்த முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் காலம் காலமாக பல்வேறு நோய்களுக்கு சிறந்த தீர்வாக இந்த முடக்கத்தானை பயன்படுத்தியுள்ளனர்.


முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடியாக  படர்ந்து இருக்கும் ,இது மாதவிடாய் வலியைப் போக்க வல்லது. மேலும் இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வாத நோய், மூட்டு வலி போன்றவற்றை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை இந்த முடக்கத்தானுக்கு உண்டு.இந்த முடக்கத்தான் கீரையை துவையல், சூப் , பொரியல், அரிசி கூழ், ரசம் என பல்வேறு வகைகளில் நாம் வீடுகளில் செய்த உண்ணலாம். மூட்டு வலி, பக்கவாதம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறையேனும் உணவிலோ அல்லது தனியாக மருந்து என்ற வகையிலோ இந்த முடக்கத்தானை எடுத்துக் கொண்டால் சிறந்த நிவாரணத்தை தரும்.


 தலை சுற்றல், பித்தம், உடல் வலி, மூலம், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த முடக்கத்தான் கீரை இருக்கிறது.


இந்த முடக்கத்தான் கீரையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் மிக நல்ல பலன் உண்டு. அதுமட்டும் அல்லாமல் ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் முடக்கத்தான் கீரையை நன்றாக அலசி காயவைத்து பொடியாக்கி தோசை மாவுடன் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வர உடலில் நரம்பு ,எலும்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். உடல் மூட்டுகளில் இருக்கும் யூரிக் ஆசிட்டை  கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்து சென்று அதனை சிறுநீராக வெளியேற்றும் வேலையை இந்த முடக்கத்தான் கீரை செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதேபோல் உடலுகுக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவற்றை இந்த முடக்கத்தான் கீரை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. இதனால் மூட்டுகளுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது. உடலில் சோர்வு நீங்கி நல்ல தெம்புடன் இருக்கும். மேலும் முடக்கத்தான் கீரையுடன் உளுந்து, புளி, சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி   துவையல் செய்து சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.


காதுவலி குணமாக முடக்கத்தான் கீரையை சாறு எடுத்து காதில் 2 சொட்டு ஊற்ற காது வலி குணமாகும் என்ன சொல்லப்படுகிறது. முடக்கு வாதத்தை சரி செய்யக்கூடிய இந்த முடக்கத்தான் ஆனது ,கண் பார்வை, வாயு தொல்லை, மலச்சிக்கலை சரி செய்கிறது.


அதேபோல் தோல் நோய்கள் சரியாக முடக்கத்தான் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வர கரப்பான், சொறி, சிரங்கு போன்ற  நோய்கள் குணமாகும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதேவேளை உடலுக்கு தேய்த்து குளித்து வர தோல் நோய்கள் குணமாகிறது. மூட்டுவலி உள்ளவர்கள் தொடர்ந்து முடக்கத்தான் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்து குணமடைவதோடு , மூட்டு வலிகளில் இருந்து விடுதலை பெறுவர்.


 உடல் சோர்வு, அசதி இருப்பவர்கள் முடக்கத்தான் ரசத்தை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். தற்போது முடக்கத்தான் ரசம் செய்யும் முறையை பார்க்கலாம்: முடக்கத்தான் ரசத்தை குறைந்த அளவு பத்து நிமிடங்களில் தயாரிக்கலாம். 


முடக்கத்தான் கீரை ரசம் தயாரிப்பதற்கான குறிப்புகள்:


ஒரு கைப்பிடி அளவு மட்டுமே முடக்கத்தான் இலைகளை  பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கீரைகளை அதிகம் சேர்த்தால் ரசம் கசப்பாக இருக்கும். இலைகளை மற்ற அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து வதக்கி பின்னர் அனைத்தையும் பேஸ்ட் ஆகும்வரை அரைக்கவும். அதேபோல் தக்காளியையும் நாம் தனியாக அரைத்து இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:


தக்காளி   - 3


முடக்கத்தான் கீரை   - 1 கட்டு


உப்பு - தேவைக்கேற்ப


கறிவேப்பிலை   - 1 கொத்து


பூண்டு பல் - 4


மிளகு     - அரை டீஸ்பூன்


கொத்தமல்லி தழை   - 1 கைப்பிடி


சீரகம்     - 3 டீஸ்பூன்


எண்ணெய் - தேவைக்கேற்ப


¼ சிட்டிகை மஞ்சள்


அரைக்கும் பொருட்கள்:


1 தேக்கரண்டி நெய்
1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
2 தேக்கரண்டி சிறு பருப்பு
1 தேக்கரண்டி மிளகு
1 தேக்கரண்டி சீரகம்
3  கிராம்பு


செய்முறை :


முதலில் புளியை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் பின்னர் பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும் . பின்னர் முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடியாக்கி சேர்த்து வறுத்து கொண்டு, வேக வைத்த முடக்கத்தான் கீரை மற்றும் புளி, தக்காளி கரைசலையும் சேர்க்கவும்.


புளி ,தக்காளி கலவையை 5 நிமிடம் வேகவைத்து அதன் பச்சை வாசனை போக, 5 நிமிடம் கழித்து மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.
ரசத்தை 3-4 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.ரசத்தின் மேல் நுரை வரும் வரை தீயில் வைக்கவும். பிறகு பூண்டு, கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து தேவையான அளவு உப்பை போட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.


முடக்கத்தான் ரசத்தை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.