நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது. நம் வாழ்க்கை முறையிலும் உணவுமுறையிலும் கவனமாகவும் விழிப்புடன் இருப்பது அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக உயிர் வாழ தேவையான அனைத்து சத்துக்களும் பச்சை காய்கறி, பழங்களில் கொட்டி கிடக்கின்றன.  

தினமும் நாம் உண்ணும் உணவில் அதிகப்படியாக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்து கொள்வதால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். அதில் சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வரிசையில் மிகுந்த சத்துக்களை கொண்ட விளாம்பழத்தை பற்றி தெரிந்துகொள்வோம். வறண்ட பூமிகளான தென்னாசிய நாடுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் நன்கு வளரக்கூடிய மரம் விளாமரம். இந்த விளாம்பழத்தை ஓடுகள் கடினமாக இருப்பினும் உள்ளே இருக்கும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.  


விளம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதனால் வயிற்றுபோக்கு, நரம்பு தளர்ச்சி, பித்தம், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் தினம் ஒரு விளாம்பழம் சாப்பிடுவதால் அவர்களின் குறைபாடு நீங்கும். மூளையும், இதயமும் பலப்படும்.

விளாம்பழத்தின் ஓடு உடைத்து பழத்தை மட்டும் அப்படியே சாப்பிடலாம் அல்லது அதில் வேறு விதமான டிஷ் செய்து சாப்பிடலாம். அப்படி செய்யக்கூடிய 3 வகையான டிஷ் பற்றி பார்க்கலாம்.

விளாம்பழ ஜாம் :




பழத்தின் உட்பகுதியை மட்டும் எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு தண்ணீர், சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். ஜாம் பதத்திற்கு சுண்டிய பிறகு இறக்கி ஆறவைத்து ஸ்டோர் செய்துகொள்ளலாம். குழந்தைகள் ஜாம் பதத்தில் இருப்பதால் விரும்பி சாப்பிடுவர். உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

விளாம்பழ சர்பத்:

பழத்தின் உட்பகுதியை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு குளிர்ந்த நீர் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி சர்க்கரை சேர்க்கவும். புதினா இலை, ஐஸ் கியூப்ஸ் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.  கோடை வெயிலுக்கு ஏற்ற ஒரு குளிர்ந்த சர்பத் ரெடி.

 




விளாம்பழ பச்சடி :

   
இனிப்பான ஜாம் அல்லது சர்பத் சாப்பிட விருப்பமில்லாதவர்கள் கர்நாடகாவின் ஸ்பெஷல் ரெசிபியான இந்த ஸ்பைசி விளாம்பழ பச்சடியை ட்ரை பண்ணலாம். நல்லெண்ணையில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை தாளித்து அதில் விதை நீக்கிய விளாம்பழத்தை மசித்து சேர்த்துக்கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து சுண்டிய பிறகு பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும். காரம், புளிப்பு, இனிப்பு எல்லாம் சேர்ந்த ஒரு ருசியான விளாம்பழ பச்சடி தயார்.