தேவையான பொருட்கள்


வெந்தயம் – 50 கிராம்


புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு( ஆழாக்கு இல்லையென்றால் அதன் அளவிலான டம்ளர் எடுத்துக்கொள்ளலாம்)


சுக்கு பொடி – அரை ஸ்பூன்


ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்


கருப்பட்டி – 200 கிராம்


நல்லெண்ணெய் – தேவையான அளவு


உப்பு – தேவையான அளவு


செய்முறை


வெந்தயம் மற்றும் புழுங்கல் அரிசியை தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.


பின் வெந்தயத்தை மட்டும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இதனையடுத்து ஊறவைத்த அரிசியை கொரகொரப்பாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் ஒரு மண் சட்டி அல்லது கடாய் வைத்து கருப்பட்டியை காய்ச்சும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளவும்.


கருப்பட்டி உருகியதும் அந்த கருப்பட்டி தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


இந்த கருப்பட்டி தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்


கருப்பட்டி பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த அரிசி மற்றும் வெந்தய மாவை இதில் சேர்க்கவும். மாவு அடிப்பிடிக்காமல் இருக்க கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 


அதன் பின் ஏலக்காய், சுக்கு பொடி சேர்த்து கட்டி படாமல் கிளறி விட வேண்டும்.


சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து களி கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி விட வேண்டும். பின் இதை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியமான வெந்தயக் களி தயார். 


வெந்தயத்தின் நன்மைகள் 


 வெந்தயம் சாப்பிடுவதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் பொருள் கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது என சொல்லப்படுகிறது. இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. 


வெந்தயத்தில் உள்ள ஹைபோ-லிபிடமிக் மூலப் பொருட்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை சீரான் அளவில் வைக்க உதவும் என சொல்லப்படுகின்றது. 


முளைக்கட்டிய வெந்தயம் செரிமான பிரச்சனை வாயு தொல்லை போன்றவற்றை சரி செய்ய உதவும் என்று சொல்லப்படுகிறது.


வெந்தயம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளது.


இது வயிற்றை வேகமாக நிரப்பும் என்றும், பசி உணர்வை இது கட்டுக்குள் வைக்கும் என்பதால் உடல் எடை சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. 


வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.