நாம் மூன்று வேளை உண்பது முக்கியமல்ல. நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து உடையதா என்பது தான் முக்கியம். உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம். அன்றாடம் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?
பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். தேகத்தின் மினுமினுப்பைக் கூட்டும். ஆனால் அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதேபோல் ஒவ்வொரு வகை நிறத்திலும் உள்ள பழங்கள் குறிப்பிட்ட பண்பினையும் குறிப்பிட்ட நோய்களை தடுக்கும் அல்லது குறைக்கும் தன்மையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்கு மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, ரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும் தன்மை உடையது.
சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இவை ரத்தத்தை விருத்தி செய்யும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எனவே, பழங்களின் நன்மைகளை முழுவதுமாகப் பெற வேண்டுமானால் எந்த வகை பழத்தை எந்த சீசனில் சாப்பிட வேண்டும். எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்வது அவசியம்.
அன்றாடம் ஒரு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஐந்து நன்மைகள்:
1. நார்ச்சத்து அதிகம்
பழவகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. அதனால் அன்றாடம் ஒரு பழவகை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும். பழங்களில் இருந்து பெறப்படும் நார்ச்சத்து வயிறை சீராக இயங்க வைக்கும். மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற தொந்தரவுகளை விலக்கும்.
2. உடல் எடை குறைப்பில் உதவும்
அன்றாடம் ஒரு பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். எப்படி எனக் கேட்கிறீர்களா? பழங்களில் உள்ள ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், விடாப்பிடியாக படிந்திருக்கு கொழுப்பைக் கரைக்கு. ட்ரைகிளசரைட்ஸை கரைக்கும். அதனால் உடல் எடை குறையும்.
3. உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்
அன்றாடம் ஏதேனும் ஒரு பழம் எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைத்துவிடும். வைட்டமின் சி நம் உடம்பில் இருந்து எளிதில் வெளியேறிவிடும். அதனால் அன்றாடம் பழம் சாப்பிடுவதால் அதன் அளவு குறையாமல் பார்க்கலாம். கால்சியமும் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
4. ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம்
பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும்.
5. சருமத்திற்கும், கேசத்திற்கும் நலம் தரும்
பழங்கள் சாப்பிடச் சாப்பிட சருமம் மினுமினுக்கும். கேசம் பளபளக்கும். அதனால் சரும பராமரிப்பு, கேச பராமரிப்பை உணவுப் பழக்கத்திலிருந்தே நீங்கள் கொண்டு வரலான். அதற்கு சமச்சீரான உணவை உண்ணுங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அன்றாடம் ஒரு பழம் சாப்பிடுங்கள்.
பழங்களில் பலவிதமான ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இந்த இரண்டு பொருட்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, கொலாஜனை அதிகரிக்கின்றன மற்றும் சருமத்தை தெளிவாக வைத்திருக்கின்றன. இவை இரண்டும் முடி மற்றும் தோலின் பளபளப்பை அதிகரிக்கவும், சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
மேற்கூறிய ஐந்து காரணங்களுக்காகவே நீங்கள் அன்றாட பழங்களை சாப்பிட வேண்டும்.