தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.




இதன் மூலம்  1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து, கடந்த  25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்  பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.


இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.




பின்னர், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




                               மாணவர்களுடன் உரையாடி கொண்டே காலை உணவருந்திய கனிமொழி


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை உட்கொண்டார். 




மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.