கடந்த சில நாட்களுக்கு முன் ஷவர்மா உணவு குறித்து தான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம், கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்து உண்மைதான் என்றாலும் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை மருத்துவத்துறையினர் ஆய்வு செய்தனர். உயிரிழந்த சிறுமிக்கு பிரேத பரிசோதனையும் நடந்தது. பிரேத பரிசோதனை படி சிறுமியின் உயிரிழப்பிற்கு ஷிகெல்லா வகை பாக்டீரியாதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவில் இந்த பாக்டீரியா பரவும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா பரவியதால்தான் சிறுமி உயிரிழந்தார் என்றும், மேலும் 3 பேருக்கு இந்த பாக்டீரியா பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வந்தனர். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர், மாட்டுத்தாவணி பழ சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அழுகிய நிலையில் விற்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.