நீண்ட வயது வாழ வேண்டும் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை கனவுகளில் ஒன்று. நோயற்ற வாழ்வு மற்றும் மன தெளிவுடன் நூறு வயது வரை வாழ வேண்டும் என்பது,அனைவரின் ஆசையாகும். இப்படி வாழ்வதற்கு,நிறைய பேர் விருப்பப்பட்டாலும்,அவர்களின் உடல் மற்றும் மன ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது அவர்களின் பழக்க வழக்கங்களை வைத்து முடிவாகிறது.


ஆரோக்கியமான உணவு,வயதுக்கு தகுந்தார்போல் உடற்பயிற்சி,ஆழ்ந்த உறக்கம் மற்றும் மனதில் தெளிவு என அனைத்தும் சேர்ந்தே நோயற்ற வாழ்வுடன்,நீண்ட வயது வாழ,உதவி செய்கிறது.


ஆரோக்கியமான உணவு:


எந்த வயதினராக இருந்தாலும், உணவு என்பது வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றி அமையாததாக இருக்கிறது.இந்த உணவும் கூட,புரோட்டீன்கள், விட்டமின்கள்,நல்ல கொழுப்புகள், அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம்,மக்னீசியம்,இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


50 வயதுக்கு மேல், எலும்பு தேய்மானம், பார்வை திறன் குறைவு, நினைவாற்றல் பிரச்சினைகள்,ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை ஏற்படும் என்பதை முன்னரே உணர்ந்து,அதற்கு ஏற்றார் போல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது என்பது, நீண்ட நாள் வாழ ஒரு வழியாகும். பொதுவாக மனித உடலானது,அசைவ உணவுகளை ஜீரணிப்பதற்கோ, மென்று விழுங்குவதற்கான அமைப்பில் படைக்கப்படவில்லை. ஆகையால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் அசைவத்தை தவிர்த்து,சைவ உணவுகளில் புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த,பயிறு வகைகள், கீரைகள்,காய்கறிகள் மற்றும் பழங்கள் என எதிர்காலத்தை திட்டமிட்டு,இன்று சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் அளவில்,வயதான பின், நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


உடற்பயிற்சி:


"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருத்தலாகாது பாப்பா" என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப,சிறு வயது முதலே,ஏதேனும் ஒரு வகையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது,மிகவும் அவசியம்.


சிறுவயது முதலே சிலருக்கு கபடி, கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் போன்ற விளையாட்டுகள் மேல் ஆர்வம் இருக்கும். இன்னும் சிலருக்கு நடப்பது, என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும்.நிறைய பேர் சைக்கிள் மிதிப்பது மற்றும் நீச்சல் பயிற்சி என விரும்புவார்கள்.இன்னும் சிலர் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள  ஜிம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இப்படி உங்களுக்கு சிறு வயது முதலே உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு எது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதோ,அதை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.60 வயதிற்கு மேல் நீங்கள் நோயின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, இந்த உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாததாக இருக்கும். 60 வயதுக்கு பின்னரும் உங்கள் வயதிற்கும்,உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஏற்ப,ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது என்பது மிகவும் இன்றியமையாததாகும். இத்தகைய உடற்பயிற்சிகளே உடலுக்கு தேவையான அதிகப்படியான ஆக்ஸிஜனை நமது செல்களுக்கு கொண்டு சென்று நம்மை ஆரோக்கியமாக வைக்கின்றது.


ஆழ்ந்த உறக்கம்:


எந்த ஒரு மனிதனுக்கு தூக்கம் சரி இல்லையோ,அந்த மனிதனுக்கு, வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்பது கண்கூடான உண்மை
சோர்வு,ஞாபகமறதி,கவன சிதறல் போன்றவை ஏற்படுவதின் மூலம், தொழிலிலும்,வாழ்க்கையிலும் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும்.எனவே சிறு வயது முதல்,ஆரோக்கியமான தூக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.அப்படி இல்லை எனில் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி,ஆழ்ந்த தூக்கத்திற்கு தேவையான வழிமுறைகளை கையாளுங்கள்.


மனத் தெளிவு:


கவலைகள் இல்லாத பயம் இல்லாத எதிர்காலம் இருக்கும் போது மட்டுமே, மனத் தெளிவும்,அதன் மூலம் மன அமைதியும் வரும். 
நடைமுறை வாழ்க்கைக்கும்,வயதான பின் எதிர்காலத்திற்கும்,தேவையான பணத்திற்கு,மிகச் சரியாக திட்டமிட்டு கொள்ளுங்கள்.இதே போலவே உறவுகளிடம் பிணக்குகள் இல்லாமல், மனதை கவலையின்றி, செம்மைபடுத்திக் கொள்ளுங்கள்.


இவ்வாறு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி,ஆழ்ந்த உறக்கம் மற்றும் மனத்தெறிவு ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலமே, நமது ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு நீண்ட காலம் நம்மால் வாழ முடியும்.