கடல் உணவுகளை ஏராளமானோர் விரும்புவதற்கு காரணம் அதன் சுவைதான். மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள் நல்ல சுவை மிகுந்தவை. குறிப்பாக மீன் ஏராளமானோருக்கு பிடிக்கும். மீனில் குழம்பு, வறுவல், புட்டு, ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை செய்யலாம். எந்த வடிவில் சமைத்தாலும் மீன் அதற்கு உண்டான தனித்துவமான சுவையை கொடுக்கும். இதில் மீன் மஞ்சூரியனும் நல்ல சுவை மிகுந்ததாக இருக்கும். இதை சூடான சாதம், பிரியாணி, ப்ரைட் ரைஸ்  உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும். இப்போது மீன் மஞ்சூரியன் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள்


துண்டு மீன் - 1/2 கிலோ, சோளமாவு - 25 கிராம், மைதா -  25 கிராம், முட்டை - 1, கொத்தமல்லி - சிறிது, எண்ணெய்- தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, வெங்காயம் - 2, பூண்டு - 6 பல், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 5, சோயா சாஸ்- தேவையான அளவு,  தக்காளி சாஸ்- தேவையான அளவு, வெங்காயத்தாள் - தேவைக்கு ஏற்ப. 


செய்முறை


கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். அதில் மீனை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக மிக்ஸ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.


இப்போது மீன் மசாலா உடன் நன்கு ஊறி இருக்கும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும்,  மீனை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.  இப்போது அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான மீன் மஞ்சூரியன் தயார். இது சாதம் பிரியாணி போன்றவற்றிற்கு நல்ல சைடிஷ் ஆக இருக்கும். இந்த மீன் மஞ்சூரியன் சாஸ் உடன் சேர்ந்து இருப்பதால் ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மீன் மஞ்சூரியனை விரும்பி சாப்பிடுவார்கள். 


மேலும் படிக்க, 


”உங்களை நம்பிதான்... இதையெல்லாம் செய்க” - திமுக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின்


Kamalhassan: தந்தி அனுப்பிய கருணாநிதி; முற்றிய கருத்து மோதல் - நேருக்கு நேர் பதிலளித்த கமல்ஹாசன்