கமல்ஹாசன்


தமிழ் சினிமாவில் 64 ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் இன்றையத் தலைமுறையினருக்கு முன்னோடியாக இருந்து வரும் கமல்ஹாசன் அரசியல் ரீதியாகவும் தன்னுடைய கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவர். திரையுலக பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களுடன் தொடர்ச்சியாக உரையாடி வருபவர். அந்த வகையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரான கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்திருக்கிறார் கமல்ஹாசன். கருணாநிதி குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணைதளத்தில் வைரலாகி  வருகிறது.


தசாவதாரம் படத்தை பாராட்டிய கருணாநிதி


” தசவதாசரம் படத்தின் போது  நான் கருணாநிதியை சந்தித்திருந்தேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அவர் என்னிடம் கேட்டார். அலையாத்திக் காடுகள் எல்லாம் அழிந்து வருகின்றன. அதை பாதுகாக்க போராடும் பூவாரகன் என்கிற கதாபாத்திரம் ஒன்று படத்தில் இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். அவருக்கு  சரியாக புரியவில்லை என்று மக்களுக்கு புரியும் வகையில் மணல் கொள்ளையைப் பற்றி எடுக்குமாறு என்னிடம் சொன்னார். தசவதாரம் படத்தைப் பார்த்தப் பின் என் கண்ணத்தை அவர் கிள்ளியது எனக்கு இன்றுவரை நியாபகம் இருக்கிறது. நான் அவர் அருகில் இல்லாத தருணத்தில் கூட தன்னுடன் இருப்பவர்களிடம் தசவதாரம் படத்தைப் பாராட்டினார்.” என்று கமல் கூறினார்


தி.மு.க வில் ஏன் சேரவில்லை


”கருணாநிதி அவர்களிடம் இருந்து திடீரென்று ஒரு நாள் எனக்கு தந்தி வந்தது.  நான் ஏன் இன்னும் தி.மு.க வில் சேரவில்லை என்று அந்த தந்தியில் இருந்தது. அவருக்கு என்ன பதில் எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் அவருக்கு எந்த பதிலும் எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால் ஒருமுறைகூட அவர் என்னிடம் அதைப் பற்றி கேட்டதில்லை. என்னுடைய விருப்பங்களுக்கு மதிப்பளித்து என்னை என் போக்கில் அவர் விட்டுவிட்டார்.” என்று கமல் பேசியுள்ளார்


எனக்கு எதிராக பேசிட்டியே


” அதே நேரத்தில் 1987 ஆம் வருடம் வெளியான ஒரே ஒரு கிராமத்திலே படத்திற்கு 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அரசியல் நிலவரங்களால் அந்தப் படத்திற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தலைமையில் நாங்கள் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்த இருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு கலைஞர் கருணாநிதியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் அந்தப் படத்திற்கு தனது கையால் விருது வழங்க மாட்டேன் என்று கலைஞர் மறுத்துவிட்டார். இட ஒதுக்கீடு என்பது ஒரு மாற்றுப்பாதை; அதை ஆதரித்துதான் பேச வேண்டுமே தவிர அதை எதிர்த்து பேச கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நான் இட ஒதுக்கீடு ஒரு மாற்றுப்பாதை. தற்போது இருக்கும் பாலம்  பழுதாகி இருப்பதால் தான் அந்த மாற்றுப்பாதையை பயன்படுத்துகிறோம். அதற்காக அந்த மாற்றுப்பாதையே நிரந்தரமாகி விடக் கூடாது என்று நான் பேசினேன்.


இதனைத் தொடர்ந்து கருணாநிதி என்னை அழைத்து பேசினார். கொஞ்ச நேரம் பேசி எனக்கே எதிராக பேசிவிட்டாயே என்று எனது கருத்தை மாற்றி பேச சொன்னார். நான் என் மனதிற்கு உண்மையாக பட்ட கருத்தைதான் பேசினேன். அதை என்னால் மறுத்து பேச முடியாது என்று அவரிடம் நேரடியாக சொல்லிவிட்டேன். ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார். ஜனநாயகத்தில் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கைதான் என்னை மாதிரியான இளைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகளை பகிர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை எங்களுக்கு கொடுத்தார்” என்று கமல் பேசியுள்ளார்.