காலை உணவில் முட்டை சேர்ப்பது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். காலை உணவு அன்றைய தினத்திற்கான ஆற்றலை தருகிறது, காலை உணவில் அதிகளவில் புரதம், ஃபைபர் சேர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எளிதாக காலை உணவில் சேர்க்க கூடியதாக முட்டை இருக்கிறது. வேக வைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிடலாம். நமக்கு கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. அவை புரதம் நிறைந்தவை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் குறைவாக உள்ளன. ஒரு வார முட்டை உணவுத் திட்டமானது, தண்ணீர், சர்க்கரை அல்லாத திரவங்கள் மற்றும் பிற கார்போஹைட்ரேட் உணவுகளுடன் முட்டை உணவை உள்ளடக்கியது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முட்டைகளை சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதோடு, உடலுக்கு சரியான அளவு புரதத்தையும் வழங்குவதாக பல்வேறு வடிவங்களில் கூறப்படுகிறது.
காலை உணவாக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் நாளை தொடங்குவதற்கான சரியான வழியாக இருக்கலாம்!
ஆம்லெட், போச்டு எக், ஸ்க்ராம்ல்டு முட்டை என பல வகையாக முட்டைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அப்படிதான் முட்டை இட்லியும்.
முட்டை இட்லி:
என்னென்ன தேவை?
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கேரட், பனீர் - ஒரு கப்
மிளகு தூள் - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
முட்டை இட்லி என்ற வார்த்தையை கேட்டதுமே அதன் செய்முறை ஓரளவிற்கு புரிந்திருக்கும். இதோடு உங்களுக்கு பிடித்த காய்கறி, இறைச்சி ஆகியவற்றை சேர்த்துகொள்ளலாம். கேரட், பனீர் உள்ளிட்டவற்றை துருவி எடுத்துகொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேவையெனில், இதை எண்ணெயில் நன்றாக வதக்கி எடுக்கவும். (விருப்பம் எனில் வதக்காமலும் இட்லியில் சேர்க்கலாம்.) இப்போது முட்டை இட்லி செய்ய, ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி, அதோடு வதக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், பனீர் என எல்லாவற்றையும் சேர்க்கவும். இதோடு, மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி தழை கலந்து நன்றாக கலக்கவும்.. இப்போது இட்லிக்கு செய்ய கலவை தயார்.
இதை இட்லி தட்டில் எண்ணெய் தடவியும் செய்யலாம். இல்லையெனில், சிறிய கிண்ணங்களில் என்றாக எண்ணெய் தடவி, அதில் முட்டை கலவையை ஊற்றி 7-8 நிமிடங்கள் வேக வைத்தால் முட்டை இட்லி தயார். தேவையெனில், இதோசு சீஸ் சேர்த்தும் செய்யலாம். சுவை நன்றாக இருக்கும்.
மையோனஸ், கெச்சப் வைத்து கூட சாப்பிடலாம். உங்க சாய்ஸ்