இயற்கை வழங்கியுள்ள மிகவும் உன்னதமான, ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளில் ஒன்று தான் இந்த விதைகள்.


சணல் விதை:


பொதுவாக எல்லோரும் முந்திரி விதை, சூரியகாந்தி விதை, பூசணி விதை, சியா விதை, ஆளி விதை, சப்ஜா விதை,வெள்ளரி விதை போன்றவற்றைப் பற்றி அதிக அளவில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சணல் விதைகள் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏனைய விதைகளை விட அதிக அளவு வைட்டமின்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது இந்த சணல் விதையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


பொதுவாக மூன்று டேபிள் ஸ்பூன் சணல் விதைகளில் 166 கலோரிகள் வரை ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் 10 கிராம் புரதம்,14 கிராம் அழற்சி எதிர்ப்பு கொழுப்பு, 2.5 கிராம் நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் 1 கிராம் நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது.


பெண்களுக்கு சிறந்தது:


சணல் விதைகளில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் மாங்கனீஸ் 99% இருப்பதாகவும் இது உடலில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்து மற்றும் உடலில் உள்ள பல்வேறு நொதிகளை செயல்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிகமாக உள்ள மெக்னீசியம்  நல்ல மனநிலை நினைவாற்றல், கற்றல் மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை தரும் என கூறப்படுகிறது.


இதில் அடங்கியுள்ள காமா-லினோலினிக் அமிலம் ஹார்மோன்கள் நன்றாக செயல்பட உதவுகிறது எனவும் 
சணல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது எனவும் கூறப்படுகிறது.


ஏராளமான மருத்துவ குணம்:


எடை இழப்பு, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இயற்கையான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது இந்த சணல் விதைகள்.  சணல் விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உடலில் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் சமநிலையை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், துல்லியமான அளவுகளில் கொழுப்புகளை கட்டுப்படுத்தும்  திறன் கொண்ட ஒரே தாவரம் என இந்த சணல் விதை கூறப்படுகிறது.


பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்கும்  மருத்துவ குணம் கொண்டவையாக இந்த சணல் விதைகள் இருக்கின்றன. சணல் விதைகளில் உள்ள அர்ஜினைன், அமினோ அமிலங்கள் மற்றும் காமா-லினோலிக் அமிலம்  உடலில் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் இரத்த  அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.


சணலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதென கூறப்படுகிறது. இது உடலில் உள்ள குடல்களின் செயல்பாட்டை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. சணல் விதையில் காணப்படும் நார்ச்சத்து வயிற்றை நிரம்பச் செய்து, குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. சணல் விதைகள் குறைந்த கலோரிகள், உப்பு, நார்ச்சத்து மற்றும் முழுமையான புரதத்தை  கொண்டிருக்கின்றன, இது அதிகமாக உணவு உண்பவர்களின் பசியை அடக்கி சமநிலைப்படுத்துகிறது.


 சணல் விதைகள் முழுமையான தாவர புரதத்தை கொண்டிருப்பதால் இதில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை தசை வளர்ச்சி,  சகிப்புத்தன்மை, எடை இழப்பு, மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது.


சணல் விதைகளில் உள்ள காமா-லினோலெனிக் அமிலம் கணையம் மற்றும் தைராய்டு ஹார்மோன்களை சீராக இயங்கச் செய்கிறது, மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 


மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னரான அறிகுறிகள் புரோலேக்டின் என்ற ஹார்மோனின் செயல்பாடு காரணமாக உடலில் உணரப்படுகிறது.  சணல் விதைகளில் உள்ள காமா-லினோலெனிக் அமிலம்  புரோஸ்டாக்லாண்டின் E1 ஐ உருவாக்கி ,அதிக அளவில் சுரக்கும் ப்ரோலாக்டினால் ஏற்படும் மார்பு வலி, மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் திரவம் வெளிருதல் ,அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது.  



ஆகவே மனித உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய இந்த சணல் விதைகளை எவ்வாறு நாம் உண்ணலாம் என பார்க்கலாம்.  இந்த விதைகளை பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ உண்ணலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நமது நாளார்ந்த உணவுகளில் இதை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.


 கிராம பகுதிகளில் இன்றளவும் அதிகமானோர் இந்த சணல் விதைகளை பயன்படுத்துவதை அறியக்கூடியதாக இருக்கிறது. கிராமப்புற கடைகளில் பார்த்தால் சணல் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆரோக்கியம் நிறைந்த சணல் விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். 


இது குறிப்பாக கீல்வாதம், மூட்டு வலி மற்றும் பொதுவான வலிகள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக சணல் விதை எண்ணைய் இருக்கின்றது. ஆகவே இந்த சணல் விதைகளின் முழு பலன்களும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் .ஆகவே ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக இந்த சணல் விதைகள் காணப்படுகின்றன.