முள்ளங்கி சாம்பார் தானே பிரபலம். அதென்ன முள்ளங்கி ஜூஸ். முள்ளங்கி வேகவைத்த தண்ணீரே அத்தனை நெடி அடிக்குமே அதை எப்படி ஜூஸாக்கி குடிப்பது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுகிறதா? குழம்பாமல் தொடர்ந்து வாசியுங்கள்.


முள்ளங்கி பலன்கள்:


பொதுவாகவே முள்ளங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதோடு மட்டுமல்லாமல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்த நாளங்களை வலுப்படுத்தும். சாலட்டில் சேர்ப்பது, பொறியலாகச் சாப்பிடுவது அல்லது பராத்தாவாகச் சமைத்துச் சாப்பிடுவது என பல்வேறு வகைகளில் இதனை உட்கொள்ளலாம். 


முள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் வெள்ளை முள்ளங்கியில் வைட்டமின் சி உள்ளது. இது எதிர்ப்புசத்தை அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளை ஏற்படாமல் கட்டுப்படுத்துகிறது. இதுதவிர வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றையும் இது குறைக்கிறது.


இதய ஆரோக்கியத்துக்கு முள்ளங்கி கேரண்டி:


முள்ளங்கியில் ஆந்தோசயனின்ஸ், ஃபாலிக் ஆசிட், ஃபாளாவினாய்ட்ஸ் ஆகியவை உள்ளன. இதில் ஆந்தோசயனின்ஸ் இதயத்தில் எந்த குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. ஃபாலிக் ஆசிட் மற்றும் ஃபாளாவினாய்ட்ஸ்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.


ரத்தநாளங்களை வலுப்படுத்துகிறது:


முள்ளங்கியில் இருக்கும் கொலாஜன் ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது. இதனால் ஆதெரோஸ்க்ளீராய்சிஸ் போன்ற தீவிர தொற்றுகளை இது கட்டுப்பாட்டில் வைக்கிறது. செரிமானத்தை சீராக்கும்: தினமும் முள்ளங்கி சாப்பிடுவதால் உடலில் செரிமானம் சீராகும். இதனால் உடல் பருமன, வாய்வுப் பிரச்னை, குமட்டல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் உண்டாவது குறையும். 


முள்ளங்கி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:


முள்ளங்கி சிறியது 6
கேரட் சிறியது 3
ஒரு பெரிய சைஸ் ஆப்பிள்
2 செலரி தண்டுகள்
ஒரு ஆரஞ்சு பழம்
ஒரு எலுமிச்சை
அரை இன்ச் இஞ்சி
அரை இன்ச் மஞ்சள்
கால் கப் (60 மில்லி) தண்ணீர்


முள்ளங்கி ஜூஸ் செய்முறை:


முள்ளங்கி, கேரட் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் ஆப்பிளை கழுவி தோல் சீவி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கிவிடவும். 2 செலரி துண்டுகளையும் கழுவி நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு தோல் நீக்கி சுளைகளாக்கி கொட்டை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் எலுமிச்சையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை தவிர்த்து அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ப்ளண்டரில் சேர்த்து அரைக்கவும். அரைக்கும்போது அந்த 60 மில்லி தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் எல்லாவற்றையும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். தயாரான ஜூஸில் தேவையான அளவு எலுமிச்சை பிழிந்து கொள்ளவும். இப்போது சுவையான முள்ளங்கி ஜூஸ் தயார்.


முள்ளங்கி சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து அருந்துவதால் இருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.


யூடியூப் வீடியோ:


மேலே கூறியது கொஞ்சம் ரிச்சான முள்ளங்கி ஜூஸ். இப்போது இன்னொரு முறையில் எளிமையாக வெறும் முள்ளங்கி மட்டும் வைத்து செய்யும் ஜூஸ் பற்றிய யூடியூப் வீடியோ இணைப்பை தந்துள்ளோம். வெறும் முள்ளங்கி மட்டுமே வைத்து செய்யக்கூடியது இந்த ஜூஸ்.