நேற்று சமைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பரவலாக கூறப்படுவதுண்டு. அந்த உணவு வீணாகிவிடும், வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் சப்பாத்தி என்று வரும்போது கதையே வேறு. நேற்று செய்த சப்பாத்தி, அல்லது காலையில் செய்து இரவு சாப்பிடும் சப்பாத்தியில் வழக்கத்தை விட சத்து கூடுதலாகவும், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதல்லவா! நிபுணர்களின் கூற்றுப்படி, மீதமான கோதுமை சப்பாத்தி நீரிழிவு மற்றும் செரிமானத்திற்கான நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிக்கப்பட்ட 12-15 மணி நேரத்திற்குள் அவற்றை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஃப்ரீசரில் வைத்து உண்டால் இன்னும் சிறப்பு.



பாலுடன் சாப்பிடுவது சிறந்தது


ஊட்டச்சத்து நிபுணர்கள் காலை உணவில் நேற்றைய நாளில் எஞ்சியிருக்கும் பழைய சப்பாத்தியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஜேபீ மருத்துவமனையின் பேரியாட்ரிக் ஆலோசகரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஸ்ருதி ஷர்மாவின் கூற்றுப்படி, பால் அற்புதமான பண்புகளைக் கொண்டிருப்பதால், பழைய சப்பாத்தியை குருமாவுடன் சாப்பிடுவதை விட, பாலுடன் சாப்பிடுவது நல்லது என்று கூறுவதாக தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். நீங்கள் மீதமுள்ள உணவை உட்கொள்ள திட்டமிட்டால், குளிர்சாதன பெட்டியில் காற்று புகாதவாறு சரியாக சேமித்து, ஓரிரு நாட்களுக்குள் சாப்பிடலாம்.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni on Last IPL: 'இது என்னோட கடைசி சீசன்னு நான் சொல்லவேயில்ல’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி..!


மீதமுள்ள சப்பாத்தியை உட்கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்:


ஜீரணிக்க எளிதானது


பழைய சப்பாத்திகள் புதிய சப்பாத்தியை விட ஜீரணிக்க எளிதானது. ஏனென்றால், சப்பாத்தி நேரம் ஆக ஆக நொதித்து, செரிமானத்திற்கு எளிதாகிறது. செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பழைய சப்பாத்தி சிறந்த தேர்வாகிறது.


நார்ச்சத்து அதிகம்


பழைய சப்பாத்தி நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் நார்ச்சத்து முக்கியமானது. பழைய சப்பாத்தியில் புதிய சப்பாத்தியை விட அதிக நார்ச்சத்து உள்ளது, ஏனெனில் அதில் உள்ள ஸ்டார்ச்சானது, நேரமாக ஆக உடைந்து, அதிக நார்ச்சத்தை உருவாக்குகிறது. நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க விரும்புவோருக்கு பழைய சப்பாத்தி சிறந்த தேர்வாகும்.



கலோரிகள் குறைவு


புதிய சப்பாத்தியுடன் ஒப்பிடும்போது பழைய சப்பாத்தியில் கலோரி எண்ணிக்கை குறைவாக இருக்கும். சப்பாத்தியில் உள்ள மாவுச்சத்து காலப்போக்கில் உடைந்து போவதால் கலோரிகள் குறையும். இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் நிறைந்தது


ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் என்பது ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எஞ்சியிருக்கும் சப்பாத்தியை இரவில் ஃப்ரீசரில் வைப்பது, அவற்றில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தின் அளவை அதிகரிக்க உதவும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் உதவிகரமாக உள்ளது.


எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


பழைய சப்பாத்தியை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். அவற்றை சூடாக்கி, கறியுடன் பரிமாறுவது ஒரு அடிப்படை முறை. ரோலாக ஸ்டஃப்பிங் வைத்து சாப்பிடலாம். சாண்ட்விச்சிற்கு Base-ஆக பயன்படுத்தலாம். அவற்றை நொறுக்குத் துண்டுகளாக நசுக்கி, வறுத்த உணவுகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த பன்முகத்தன்மையானது வித்தியாசமான உணவுகளை சாப்பிட விரும்புவோருக்கும், ஆக்கப்பூர்வமான வழிகளில் மீதமுள்ள சப்பாத்தியைப் பயன்படுத்த விரும்புவோருக்கும் மிகப் பயனுள்ளதாக உள்ளது.