மீன் வெட்டுவது ஒரு கலை, அதில் தலைசிறந்த கலைஞராக திகழும், யூ டியூபை திறந்தாலே வந்து நிற்கும் காசிமேடு செல்வத்தின் வீடியோவை நம்மில் பலர் பார்த்திருப்போம். அவர் போல மீன் வெட்ட ஆசை உள்ளவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி முதலில் சாதாரணமாக மீன் வெட்ட கற்றுக்கொண்டு, பின்னர் தொடர்ச்சியாக செய்ய செய்ய தெறிவிடலாம்.


மீன் பலரும் விரும்பும் கடல் உணவு. உலகெங்கிலும் உள்ள மக்கள் வெவ்வேறு வழிகளில் மீனை வைத்து உணவுகள் தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வறுவல், குழம்பு என்று இருந்தாலும் அந்த சுவையும் ஊருக்கு ஊரு, வீட்டுக்கு வீடு வேறுபடும் என்பதுதான் மீனின் சிறப்பு. அதோடு வெளிநாடுகளில், பிங்கர்ஸ் செய்வதற்கும், மற்ற காண்டினன்டல் உணவுகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.


மீனை சுத்தம் செய்வது எப்படி?


சமைக்கும் பாணி எதுவாக இருந்தாலும், ஒரு சிறப்பு விருந்திற்கு மீன்தான் சரியான உணவு. ஆனால் பலரும் சங்கடம் கொள்ளும் விஷயம் என்ன என்றால் மீனை வாங்கி சுத்தம் செய்வதுதான். ஏனென்றால் மீனை வெட்டுவதும் உள்ளே உள்ள குடல் உள்ளிட்ட சாப்பிடக்கூடாத பொருட்களை எடுப்பதும், மேலே உள்ள செதில்களை எடுப்பதும் கொஞ்சம் பெரிய வேலை.


அதிலும் பச்சை நிறத்தில் இருக்கும் பித்தத்தை உடையாமல் மொத்தமாக வெளியில் எடுக்கவில்லை என்றால் அன்றைக்கு சுவையே கெட்டு, கசப்பு சுவை தட்டும். இதனை கடையிலேயே வாங்கும்போது செய்து தருவது உண்டு என்றாலும், பலர் தாங்களாகவே மீன்களை வெட்டி சுத்தம் செய்வதைக் காணலாம். அது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை என்பதை இங்கே தொகுக்கப்பட்டுள்ள எட்டு படிகளை படித்தால் புரியும்.


மீன்களை வெட்டி சுத்தம் செய்ய டிப்ஸ்



  1. நன்றாக கழுவவும்


முதல்படி மீன்களை தண்ணீரில் கழுவ வேண்டும். இது மீன் செதில்களில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை அகற்ற உதவுகிறது. மீன்களை ஓடும் நீரில் கழுவி, உங்கள் கையின் உதவியுடன், மீனை முன்னிருந்து பின்னுக்குத் தேய்க்கவும். கழுவுவதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது அவசியம்.




  1. உடல் பகுதியை பிரித்தல்


மீன்களை நறுக்கும் பலகையில் வைத்து அதைச் சுற்றி செய்தித்தாள்களை வைக்கவும். செய்தித்தாள்களை வைப்பது அந்த இடத்தை சுத்தமாக வைக்க உதவும். இப்போது கத்தியின் நுனியை மீனின் வயிற்றில் வைத்து, தலையை மட்டும் வெட்டி தனியாக வைக்கவும். அடுத்து, வயிற்றுப் பகுதியை V வடிவத்தில் வெட்டவும்.



  1. குடலை எடுத்தல்


இபோது உள்ளே இருக்கும் குடல்கள் மற்றும் பிற பாகங்களை வெளியே எடுக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் சதை மட்டுமே வைத்து, மீனுக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்க வேண்டும். அதை ஒரு கரண்டியால் கூட அகற்றலாம். குடலை தனியாக வைக்க வேண்டும், அப்போதுதான் அது உணவோடு சேராமல் இருக்கும்.



  1. பித்தத்தை நீக்க வேண்டும்


குடலோடு பித்தம் ஒரு அடர் பச்சை நிறத்தில் ஒட்டி இருக்கும். இது மீனின் வயிற்று துவாரமகும். இது ஒரு கசப்பான எண்ணெய் சுவையைக் கொண்டிருப்பதால் அதை வெளியே எடுக்க வேண்டும். ஒரு கரண்டியால் எடுப்பதன் மூலம் இதை எளிதாக செய்யலாம். மேலும், குறிப்பிட்ட பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவவும்.



  1. செதில்களை நீக்குவது


அடுத்த கட்டமாக மீன் செதில்களை அகற்றுவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும். ஆனால் கத்தியின் உதவியுடன் செதில்களை அகற்றுவதன் மூலம் அதை எளிதாக செய்யலாம். வாலில் இருந்து தொடங்கவும், மெதுவாக உடலை நோக்கி செல்லவும். மீனின் ஒரு பக்கத்தில் உள்ள செதில்களை எடுத்த பின், மீனைத் திருப்பி, அது முற்றிலும் சுத்தமாகும் வரை மறுபுறம் அதே நடைமுறையை மீண்டும் செய்யவும்.




  1. கழுவ வேண்டிய நேரம்


இப்போது நீங்கள் மீன்களை உள்ளேயும் வெளியேயும் சரியாக சுத்தம் செய்துள்ளீர்கள், அதை தண்ணீரில் கழுவ வேண்டிய நேரம் இது. மீனை நீருக்கடியில் வைத்து உங்கள் கைகளால் சுத்தம் செய்யவும். இப்போது மீனில் ஒட்டி இருக்கும் தேவையற்ற பாகங்களை அகற்ற வேண்டும்.



  1. சிறிய துண்டுகளாக வெட்டவும்


மீனை சிறிய துண்டுகளாக வெட்டுவது சிறப்பு, ஆனால் பலர் முழு மீனையும் சமைக்க விரும்புகிறார்கள், சிலர் அதை துண்டுகளாக வெட்ட விரும்புகிறார்கள். இது நீங்கள் என்ன உணவு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது. 



  1. தலையை சுத்தம் செய்தல் 


பலர் தலையை சமைக்க விரும்ப மாட்டார்கள், அவர்கள் அதனை விட்டுவிடலாம். ஆனால் மீனின் உண்மையான சுவை அறிந்தவர்கள் தலைப்பிரியர்களாக இருப்பார்கள். நீங்கள் தலையை சுத்தம் செய்ய விரும்பினால், மீனை ஒரு கையில் பிடித்து மெதுவாக அதன் வாய் பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, இரு பக்கமும் சிவப்பாக இருக்கும் செதில்களை நீக்க வேண்டும். சிறிய மீன் என்றாலும் இதே போல் நீக்கலாம். மீன் தலையை குழம்பில் போட்டு சாப்பிடுவதை பலர் விரும்புவார்கள். சிறிய மீன்களில் வறுத்தாலும் சுவையாக இருக்கும்.