தீபாவளி என்றாலே இனிப்பு உணவுகளுக்கு பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் அதிரசம் முதல் சீடை, முறுக்கு, அல்வா ,எல்லடை ,சோமாஸ் என பனியார வகைகள் தீபாவளிக்கு மேலும் சிறப்பூட்டும். அந்த வகையில் தீபாவளிக்கு வழக்கமாக செய்யும் இனிப்பு பலகாரங்களோடு இம்முறை இந்த ஆரஞ்சு பாசுந்தியை நாம் செய்து விருந்தினர்களுக்கு உபசரிக்கலாம்.


வழக்கமாக பாசுந்தியானது பாலாடையிலிருந்து மட்டுமே செய்யப்படும். ஆனால், இந்த பாசுந்தி ரெசிப்பியானது ஆரஞ்சு கலந்த பாசுந்தியாக செய்யப்படுகிறது. இதன் சுவையானது சற்று இனிப்பு புளிப்பு கலந்ததாகவே இருக்கும். குறிப்பாக சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடிய விட்டமின் சி ஆரஞ்சு பழத்தில்  நிறைந்து  காணப்படுகிறது. இந்த  ஆரஞ்சு பாசுந்தியானது  அதிகம் புளிப்பில்லாத ஆரஞ்சுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் சார்ந்த  இனிப்பு உணவாகும்.


ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் பி-6 மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை  அதிகரிக்கும் தன்மையும் இதில் அதிகமாக இருக்கிறது.


இதைப் போலவே பாலில், கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்புகளுக்கு மிகவும் நல்லது. A, B1, B2, B12, D போன்ற வைட்டமின் சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் இருப்பதால், உடலின் முழு வளர்ச்சிக்கு இது உதவும். இதில் இருக்கும் புரதசத்து, சதை வளர்ச்சிக்கும் உதவுகிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, எலும்பிற்கு மிகுந்த வலிமையையும், உறுதியையும் தருகிறது. குழந்தைகள் பால் பருகுவதால், அவர்களுக்கு பல், கண் மற்றும் ஞாபக சக்தி நல்ல வளர்ச்சி பெரும். பாலில், மஞ்சள் தூள் கலந்து பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர். 


தேவையான பொருட்கள்:


பாஸந்தி தயாரிக்க போதுமான அளவு பால், சிறிது ஏலக்காய் , பொடி செய்யப்பட்ட முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா விதைகள், சிறிதளவு குங்குமப்பூ, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை,
6 டீஸ்பூன் ஆரஞ்சு சாறு
· 1 கப் தோலுரித்து வெட்டப்பட்ட ஆரஞ்சு துண்டுகள்


செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, பால் நன்றாக சுண்டி  அதன் மேற்புறத்தில் வரும்  பாலாடையை எடுத்து தனியாக சேகரிக்க வேண்டும். இதனுடன் ஆரஞ்சு சாறு, நறுக்கி வைத்திருக்கும் ஆரஞ்சு துண்டுகள், ஏலக்காய் தூள்,பொடி செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி தூள், தேவையான அளவு குங்குமப்பொடி என அனைத்தையும் நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டவும். பாலை பாசுந்தியாக மாற்றி, ஆரஞ்சை அதனுடன் கலப்பதனால் பால் திரிந்து போகும் அபாயம் இல்லாமல் போகிறது.பலாடை மற்றும் ஆரஞ்சின் நற்பலன்களும் கலந்து சுவை மிகுந்த குளிர்ச்சியான பாசுந்தி தயார் செய்யப்படுகிறது.