தைராய்டு(Thyroid) நமது கழுத்துப் பகுதியில் பட்டர்ஃபிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஹார்மோன் குறைபாட்டை சரி செய்ய உணவு பழக்க வழக்கம் மாற்றம், அவசியம். அதற்கு ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது. ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இந்த மூன்று உணவுகளை சாப்பிட்டால் குணம் நிச்சயம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் திக்ஷா பவ்சார் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பகிர்ந்துள்ளார். அதில் தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஹைப்போ தைராய்டு, ஹைபர் தைராய்டு, காய்டர், சுய எதிர்ப்புசக்தி குறைபாடு நோயான ஹஷிமோட்டோ மற்றும் கிரேவ் நோய்கள் ஆகியனவற்றிற்கு இந்த மூன்று சூப்பர் ஃபுட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அவையென்ன சூப்பர் ஃபுட்ஸ்?
1. பிரேசில் நட்ஸ் (Brazil Nuts)
ஒரு நாளில் 2 முதல் 3 பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான செலீனியம் கிடைக்கும். செலீனியம் சீராகக் கிடைக்கப் பெறுவது தைராய்டு சீராக இயங்க அவசியமானதாகும். இது ஹஷிமோட்டோ மற்றும் கிரேவ் நோய்கள் வருவதைத் தடுக்கும். இதனால் தைராய்டு கேன்சர் வராமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல் தூக்கம், பாலியல் உறவில் ஆரோக்கியம், மூளை மற்றும் இதய நலன் பாதுகாக்கும். முடி உதிர்வதைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும். நல்ல கொலஸ்ட்ராலை கொடுத்து கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். அதிகாலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது மூன்று வறுக்கப்பட்ட பிரேசில் நட்ஸ் சாப்பிட்டு வாருங்கள்.
2. பிஸ்தா (Pistachios)
பிஸ்தாவில் நார்ச்சத்தும் மற்ற அத்தியாவசிய தாதுக்களும் அதிகம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு தைராய்டு பிரச்சனையில் தீர்வு தரும். வறுத்த உப்பு சேர்க்கப்பட்ட பிஸ்தா குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது ஆகும். தேவையில்லாத நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை பிஸ்தா தவிர்க்கும். காரணம் பிஸ்தாவை உட்கொள்ளும் போது வயிற்றில் ஒரு நிறைவு உண்டாகும். தைராய்டு பக்க விளைவுகளான மலச்சிக்கல், இமோஷனல் ஹங்கர், மூட் ஸ்விங்க்ஸ், தூக்கமின்மை, வறட்சி, மன அழுத்தம் ஆகியனவற்றை இது சரி செய்யும். ஒரு கை நிறைய பிஸ்தா, எந்த வேளையில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.
3. பேரீச்சம்பழம் (Dates)
ஐயோடின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது பேரீச்சம்பழம். இது T3 and T4 ஆகிய இரண்டு தைராய்டு ஹார்மோன்களையும் பாதுகாக்கும். அயர்ச்சி, முடி உதிர்தல், ரத்த சோகை, அதீத உதிரப்போக்கு, இனிப்பு சாப்பிடும் உணர்வு, தலைவலி, மலச்சிக்கல், மூட்டு வலிகள் ஆகியனவற்றை சரி செய்யும். இரவு முழுவதும் 3 அல்லது 4 பேரீச்சம் பழங்களை ஊற வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது மாலை நேர நொறுக்காகவும் சாப்பிடலாம்.
இதை பயன்படுத்துங்கள் பகிர்ந்து ஆரோக்கியமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தைராய்டை புரிந்து கொள்வோம்:
தைராய்டு குறைவாக இருக்கும்போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும்போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்சனை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தக்கட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும்பட்சத்தில் ரேடியோதெரஃபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும்போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்பெய்தும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.