ஆரோக்கியமாக வாழ்வது என்பது பல்வேறு வகையிலான உணவுகளை சமமாக உண்பதும், சில உணவுகளை முழுவதுமாக தவிர்க்காமல் இருப்பதும் உள்ளடக்கியதாகும். அதிகளவில் உண்பதால் பல்வேறு உடல் பிரச்னைகளை அளிப்பதாக சில உணவுகளைக் குறைப்பவர்கள் அதிகமாக உருவாகி வருகின்றனர். சில உணவு வகைகளை விலக்குவதால் நமக்கு நாமே ஊட்டச்சத்துகளைக் குறைத்துக் கொள்வதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சில டயட்களில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சர்க்கரை அளவு ஆகியவற்றை முழுமையாக உணவில் இருந்து நீக்கப்பட அறிவுறுத்தப்படுவது நம் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியது. 


சமீபகாலமாக உணவின் மீதான மக்களின் அக்கறை அதிகரித்துள்ளது. அதுவும் ஆர்கானிக் உணவு, இயற்கை உணவு என்று தேடல்கள் அதிகரித்துள்ளன. ஆர்கானிக், இயற்கை இது இரண்டுமே ஒன்றுதானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையே மெல்லிய வித்தியாசம் இருக்கிறது. அதை இங்கே விவரிக்கிறோம்.


ஆர்கானிக் உணவு என்றால் என்ன?


பூச்சிக்கொல்லிகள், ஆண்ட்டிபயாட்டிக்குகள், செயற்கை ஹார்மோன்கள், ரசாயன உரங்கள், கழிவுகள் ஆகியன இல்லாமல் விளைவிக்கப்படும் பொருட்கள் தான் ஆர்கானிக் உணவுப் பொருட்கள். இவற்றில் செயற்கை உணவு அடிட்டிவ்ஸ் ஏதும் இருக்கக் கூடாது. அதாவது ஆர்டிஃபிசியல் ஸ்வீட்னர், ப்ரிசர்வேட்டிவ்ஸ், கலரிங் அல்லது ஃப்ளேவரிங் ஏஜன்ட், மோனோசோடியம் க்ளுடமேட் ஆகியனவற்றை சேர்க்காமல் இருத்தல் அவசியம்.


ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் உணவு பொருட்கள் ரசாயனங்கள் இன்றி முழுவதும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை. ஆர்கானிக் அல்லது மீளுருவாக்கம்(regenerative) முறையில் செய்யப்படும் விவசாயத்தில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை.


ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு ஆன்டிபயாடிக்குகள், ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டிருக்காது. ஆர்கானிக் உணவு சத்து நிறைந்தவை. ஆர்கானிக் உணவு வகைகள் அதிகப்படியாக விளைவிக்கப்படுவதில்லை என்பதால் அதன் விலை அதிகமாக இருக்கிறது.




இயற்கை உணவு என்றால் என்ன?


இயற்கை உணவு என்பது மேற்கூறிய விதிகளை கடுமையாக கடைபிடிப்பது அல்ல. இதனை உற்பத்தியாளர்கள் ஒரு லேபிளாக பயன்படுத்துகின்றனர். இவை லெஸ் பிராசஸ்ட் ஃபுட் என்பதே இவற்றின் அடையாளம். அதாவது இவற்றின் ஷெல்ஃப் லைஃப் மிகவும் குறைவு. இயற்கை உணவு பதப்படுத்தப்பட்ட உணவைவிட சிறப்பானது என்பதே இதன் சிறப்பம்சம். ப்ராசஸ்ட் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுடன் ஒப்பிடுகையில் இயற்கை உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்காதவையாக இருக்கின்றன.


இனி நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் இருக்கும் ஆர்கானிக், நேச்சுரல் லேபிளின் அர்த்தம் அறிந்து வாங்குங்கள்.


மீண்டும் மீண்டும் நாம் திருமூலர் திருமந்திரமான உணவே மருந்து என்ற வாகத்தை நம் நினைவில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.