கோழி என்றாலே ருசி... நாட்டுக் கோழி என்றால், ருசியோ ருசி... அதிலிலும் இடிச்ச நாட்டுக்கோழிச்சாறு என்றால்... அப்பப்பா... அடஅடஅடா...! எழுதும் போதே எச்சில் ஊறுதே... படிக்கும் போது... ஊறாமலா இருக்கும். இடிச்ச நாட்டுக் கோழிச்சாறு என்பது தென்மாவட்ட ஸ்பெஷல். 


மருந்தாகவும், விருந்தாகவும் இருவகையாக இடிச்ச நாட்டுக்கோழிச் சாறை சமைத்து குடிக்கிறார்கள்(உண்பதை அப்படி தான் கூறுவார்கள்). 


என்ன வேண்டும்? எப்படி செய்வது? 



  • நாட்டுக்கோழி என்று விற்கப்படும் பண்ணைக் கோழிகளை வாங்காமல், சுத்தமான நாட்டுக்கோழியை வாங்கிக் கொள்ளுங்கள். தேர்வு செய்வது உங்கள் திறமை.

  • முட்டையிடாத கோழியாக இருந்தால், இன்னும் ருசியாக இருக்கும். 

  • அறுத்த நாட்டுக்கோழியை சுடுதண்ணியில் மூழ்கி சுத்தம் செய்யக் கூடாது.

  • அதன் முடிகளை பறித்து எடுத்துக் கொண்டு, உடல் முழுக்க மஞ்சள் தடவ வேண்டும். 

  • பின்னர் , காஸ் இல்லாத நெருப்பில் நன்கு வாட்ட வேண்டும். 

  • பொன்னிறமாக மாறியபின், குடல் உள்ளிட்ட கழிவுகளை நீக்க வேண்டும்.

  • சுத்தமாக கழுவிய பின், அதை உரல் அல்லது அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். 

  • உரல் என்றால் கொத்து கொத்தாக இறைச்சி பிய்ந்து போகும்





  • அம்மி என்றால் இடிந்து போகும்.

  • இப்போது நய்ந்து போன இறைச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • கடாயில் தேவைக்கேற்ப நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும்

  • சிறிதாக மிளகு, சீரகம் போட்டு, பட்டை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்

  • 2 நிமிடத்திற்குப் பின், இஞ்சி, வெள்ளைப்பூடு இடித்து போட வேண்டும்

  • அத்தோடு சிறிய வெங்காயம் உறித்து, இரு துண்டாக வெட்டி அதை போட வேண்டும்

  • 5 நிமிடம் கழித்து அவை அனைத்தும் வெந்து போயிருக்கும்

  • இப்போது இடித்து வைத்த கோழியை அதனுள் போட வேண்டும். 

  • சிறிது மஞ்சள் பொடி, மல்லி பொடியை சேர்த்து கொள்ளலாம்.

  • பட்டை மிளகாய் ஏற்கனவே போட்டிருப்பதால், மிளகாய் பொடி வேண்டாம்.

  • தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  • நீீரும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். 

  • வழக்கமான குழம்புக்கு சேர்க்கும் நீரை விட கொஞ்சம் அதிகமாக நீர் ஊற்றவும்

  • இறைச்சியின் தன்மைக்கு ஏற்ப, வேகவிடவும்

  • வேறு எந்த மசாலாவும் தேவையில்லை. 

  • நீங்கள் சேர்த்த மசாலாவுடன் இறைச்சி சாறு சேரும் போது, புதுவித வாசனை வரும்.

  • இறைச்சி வெந்து பாத்திரத்தை இறக்கும் முன், கிள்ளி வைத்துள்ள சிறிதளவு கொத்து மல்லியை தூவவும்

  • இப்போது பாத்திரத்தை இறக்கிவிடவும்.

  • சுடச்சுட கரண்டில் எடுத்து கிண்ணத்தில் ஊற்றவும்

  • அதுதான், நாட்டுக்கோழி இடிச்சச் சாறு!


பிரசவ காலத்தில் பெண்களுக்கு, நோய் வாய் பட்டவர்களுக்கு, கை கால் வலி இருப்பவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு, தென்மாவட்டத்தில் பெரும்பாலும் இந்த வகையில் தான் நாட்டுக்கோழியை பரிமாறுகிறார்கள். இன்றும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.