பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. ஆனால் பலாக்காயை நான் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலாக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள அவர்கள் சொல்லும் 6 காரணங்கள் இவை தான்.
1. பலாப்பழம் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. வடக்கே இதனை கதல் என அழைக்கின்றனர். கேரளாவில் இதனை சக்கப்பழம் என அழைக்கின்றனர். மேற்கு வங்கத்தில் இதனை கச்சா பதா ( அதாவது மரக் கறி) என்று அழைக்கின்றனர். பலாக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.
2. சர்க்கரை நோய்க்கு மருந்து:
பலாக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. இதில் அதிகப்படியான புரதமும், நார்ச்சத்தும் இருக்கின்றது. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துகிறது
பலாக்காயில் நீரில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை அகற்றுகிறது.
4. புற்றுநோய் வராமல் தடுக்கிறது:
பலாக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, ஜீரண மண்டலத்தை சீராக்குகிறது. அதனால் குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது
பலாக்காயில் ஆன்ட்டி இன்ப்ளமேட்டரி பண்புகள் இருக்கிறது. இது வைட்டமின் ஏ, சி அதிகமாகக் கொண்டுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உடல் உறுதியாக இருக்கிறது.
6. இதயத்தை பாதுகாக்கும்:
பலாக்காய் வெப்பமண்டல பழவகை. இதில் பொட்டாசியம், ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.
பலாக்காயின் நன்மைகள் மட்டும் சொன்னால் போதுமா அதை எப்படி சமைப்பது என்றே எங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. உங்களுக்காகவே எளிமையான பலாக்காய் கறி ரெசிபி இதோ:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 கிலோ
நாட்டு தக்காளி - 3/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 மி.லி.
இஞ்சி - 200 கிராம்
பூண்டு - 130 கிராம்
கொத்தமல்லி - சிறிது
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 20 கிராம்
சோம்பு, மராத்திமொக்கு, அன்னாசிப்பூ - 20 கிராம்
முந்திரி - 100 கிராம்
தேங்காய்த்துருவல் - 100 கிராம்
மிளகு - 20 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மராத்தி மொக்கு, அன்னாசிப்பூ, முந்திரி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கிய பலா பிஞ்சை வெந்நீரில் போடவும், அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். இதற்கிடையில் கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்.
இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவை ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பின்பு அதில் பலா பிஞ்சு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி சுருண்டு வந்ததும், கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான பலாக்காய் கறி தயார்.