எப்போதுமே நன்கு ஆரோக்கியமான  ஊட்டச்சத்து மிக்க  உணவு வகைகள் உடலையும், மனதையும் எப்போதும் ஒரு புத்துணர்வுடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கக் கூடியவை என சொல்ல கேட்டிருப்போம்.  அந்த வகையில் மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என முதலில் கண்டறிய வேண்டும் , உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், விட்டமின் குறைபாடுகள், சுற்றுச்சூழல், அன்றாட வாழ்க்கை நடைமுறை என பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.   ஆகவே நல்ல ஆரோக்கியமான ,நமக்கு மிகவும் பிடித்தமான இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலானது அதன் செயல்பாட்டில் இயங்கத் தொடங்குகிறது . ஆகவே எதனையும் சமாளிக்கும் திறனையும் , எதிர்கொள்ளும் ஆற்றலையும் உடலே நமக்கு வழங்குகிறது.


ஆதிகாலம் தொட்டு நம் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்ததால் அவர்களுக்கு மன அழுத்தம் என்பது என்னவென்று தெரியாது இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இயந்திரமயமான இந்த உலகில் சிக்கிக் கொண்டுள்ள நாம் அதற்கு ஏற்றார் போல வாழ்வதால் பல அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். ஆகவே இது உடலளவில் மன அழுத்தமாக உருவாகி நம்முடைய  உடல் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அபாயகரமான நோய்களுக்கு வழிவகை செய்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.


ஆகவே இயற்கையோடு இணைந்த ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பச் செல்ல வேண்டுமானால் அது சாத்தியமானதா என்பதையும் நாம் தான் முடிவு பண்ண வேண்டும். இந்த போட்டிகள் சூழ்ந்த, சமூக கட்டமைப்பில் இருந்து நாம் விலகி நமக்கான தனியான பாதையை அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்த ஒரு அமைதியான ஒரு அழகான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.


மன அழுத்தம் என்றால் என்ன?


மன அழுத்தம் என்பது நமக்கு விரும்பாத ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது, விரும்பிய ஒரு பொருள் கிடைக்காமல் போவது ,நாம் விரும்பிய வாழ்க்கை வாழ முடியாமல் இருப்பது, நினைத்ததை சாதிக்க முடியாமல் போவது,  சுற்றி இருப்பவர்களால் நமக்கு ஏற்படும் சில விபரீதங்கள் என இவ்வாறு பல மன அழுத்தத்திற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நமது உணர்வு மண்டலம் முழுவதுமாக பாதிக்கப்படும் போது அது மன அழுத்தமாக வெளிப்படுகிறது.


கடுமையான மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன .அதிக கவலை ,அதிக வெறுப்பு ,கோபம், ஆத்திரம் என பல்வேறு விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகமானால் உடலில் கார்டிசோல்  போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.இதனால் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகமாகவது , படபடப்பு, சோர்வு தன்மை போன்ற ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் வரத் தொடங்குகின்றன.


நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முதல் அறிகுறியாக நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ,ஒருவகை பதற்றம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ,எடை அதிகரிப்பு என வாழ்க்கை முறை பிரச்சனைகளின் அபாயகரமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.


முதலில் ஆரம்பகட்டத்திலேயே மன அழுத்தங்களில் இருந்து விடுபட நாம் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாள்பட்ட மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இதனால் நாம் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க  வேண்டியுள்ளது .


அதற்கு ஒரே ஒரு வழி ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடல் நிலையை சீராக்குவதுமே என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே ஆரோக்கியமான உணவு வகைகள் உடலை சீராக வைத்துக் கொள்ளும். இயற்கையான உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை சரி செய்கின்றன. வைட்டமின்கள் பி & சி, செலினியம், மெக்னீசியம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நாம் நமது அன்றாட வாழ்க்கை நடைமுறையில் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவும் முறைகள் தான் நமது வாழ்க்கையில் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. ஆகவே உடல் தெம்பாக இருந்தால் மட்டும்தான் நாம் எதையும் எதிர்கொள்ள முடியும். குடல் ஆரோக்கியம், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் மனநிலை, சுகாதாரம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை ஆகும். ஆகவேதான் ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை எடுத்துக் கொள்வது ,மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த அடித்தளமாகும் என கூறப்படுகிறது.


 நேரத்திற்கு சாப்பிடுவது, பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுவது, நார்ச்சத்து ,புரதம்
உள்ள உணவுகளை அதிகளவு சாப்பிடுவது போன்ற சமநிலை தன்மையுடன் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது உடலளவிலும் மனதளவிலும் ஆற்றல் பெருகுகிறது. மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு நாம் அன்றாடம் உண்ணும் உணவோடும் தொடர்புடையது.


மன அழுத்தத்தை குறைக்க உதவும் சில உணவு வகைகளை பார்க்கலாம்:


டார்க் சாக்லேட்: 


பொதுவாகவே சாக்லேட்டில் கலந்துள்ள கோகோ நறுமணமானது ஒரு இதமான வாசனையை வழங்கக்கூடியதாகும். டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் ஆண்டியாக்ஸிடண்டுகள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள்,  மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் நேர்மறை ஆற்றலை கொண்டுள்ளன. இதன் நறுமணம், குறைந்த சர்க்கரை அளவு, அதன் ஒரு கசப்பு தன்மை போன்றன மனநிலையை இதமாக வைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக டார்க் சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ளாமல், தேவையான நேரத்தில் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருங்கள்.


வெதுவெதுப்பான பால்: 


இரவில் நல்ல உறக்கத்தைத் தூண்டும் சத்து மிக்க பானமாக பால் அறியப்படுகிறது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. வெதுவெதுப்பான பாலை இரவு தூங்குவதற்கு முன் அருந்துவது மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என சொல்லப்படுகிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை எலும்பை பராமரிக்க உதவும் அதேவேளை உடல் தசைகளை தளர்த்தி மற்றும் மனநிலையை உறுதிப்படுத்துகிறது.


உலர் பழங்கள் மற்றும் விதைகள்:


 மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் மற்றும் விதைகளை உட்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.  பாதாம், ஆளிவிதை, பிஸ்தா, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதோ மிகவும் சிறந்தது என கருதப்படுகிறது. 


நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: 


நார்ச்சத்து நிறைந்த காய்கறி பழ வகைகள் உடலுக்கு நன்கு ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய உணவுப் பொருட்களாகும். இவை உடலின் சமச்சீர் தன்மையை பேணுவதால் மன அழுத்தத்தை மிகச் விரைவில் சரி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் இவை  உடலையும், குடல்களையும் சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபடுவதால்  மனம்  எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.


பதற்ற , மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை குறையும் என கருதப்படுகிறது.   புதிய இலை காய்கறிகள் ,பழ வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றை அளவாக உண்ணும் போது உடல் சீரான நிலையை அடையும். அப்போது மன அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்துவிடும்.


பதப்படுத்தப்படாத தானிய வகைகள்: 


செரோடோனின் எனப்படும் அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை இயல்பாக இயங்க வைக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். மேலும் ஆரோக்கியமான, பதப்படுத்தப்படாத, இயற்கையாக கிடைக்கும் தானிய வகைகளில் போதுமான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை ஹார்மோன்களை சரி செய்ய சிறப்பான முறையில் செயலாற்றுகின்றன. இவை விரைவில் ஜீரணம் அடைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.


ஆரோக்கியமான முறையில் சாப்பிடுவதே மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி எனவும், அதற்காக யோகா, தியானங்கள், உடற்பயிற்சி என இருந்த போதிலும் நாளாந்த உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது அவை உடலை புதுப்பித்து  புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது