Bournvita Sugar Issue: போர்ன்விடாவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கேட்பெரி நிறுவனம் குறைத்திருப்பது, இந்தியாவிற்கான வெற்றி என பிரச்னையை எழுப்பிய இணையதள பிரபலமான ஃபுட் ஃபார்மர் தெரிவித்துள்ளார்.






போர்ன்விடா மீதான குற்றச்சாட்டு:


சமூக வலைதளங்களில் ஃபுட் ஃபார்மர் என்ற பெயரில் மிகவும் பிரபலமான ரேவந்த் ஹிமந்த்சிங்கா, 8 மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு இருந்தார். அவர் வைத்த குற்றச்சாட்டில் , “கேட்பெரி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து பானமான போர்ன்விடாவில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதில் உள்ள சர்க்கரை, கொக்கோ போன்ற திடப்பொருள்களில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் உள்ளன. போர்ன்விடாவில் 100 கிராமுக்கு 50 கிராம் சர்க்கரை உள்ளது. அடிப்படையில், இந்த பையின் மொத்த எடையில் பாதி சர்க்கரை மட்டுமே!" என குற்றம்சாட்டினார். இந்த வீடியோ வெளியானதும் கேட்பெரி நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. பல நன்மைகள் கிடைக்கும் என்ற போலியான வாக்குறுதிகள் மூலம், போர்ன்விடா சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது” என கூறினார்.


இது பெரிய பிரச்னையாக வெடித்த நிலையில், கேட்பெரி நிறுவனம் ரேவந்த் ஹிமந்த்சிங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.


இதன் காரணமாக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.


வலுத்த எதிர்ப்புகள்: 


ஹிமந்த்சிங்கா வீடியோவை நீக்கினாலும் அவரது கருத்தை, மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களைக் கொண்ட முன்னணி இந்திய ஊட்டச்சத்து அமைப்பு உறுதிப்படுத்தியது.


சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கடந்த ஜுன் மாதம் Cadbury India நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில்,  Bournvita தொடர்பான அனைத்து "தவறான" விளம்பரங்களையும் பேக்கேஜிங்களையும் திரும்பப் பெறக் கோரியும், பானத்தின் அதிக சர்க்கரை உள்ளடக்கம் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.


போர்ன்விடாவில் குறைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு:


இந்நிலையில் தான், புதியதாக வெளியாகியுள்ள போர்ன்விடாவில், சர்க்கரையின் அளவை கேட்பெரி நிறுவனம் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, பிரச்னைக்கு முன்பு போர்ன்விடாவில் ஒவ்வொரு 100 கிராமிற்கும் 37.4 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு 100 கிராமிற்கும் 32.2 கிராம் சர்க்கரை மட்டுமே சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 100 கிராமிற்கு சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவும் 14.4 சதவிகிதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.






”இந்தியாவிற்கான வெற்றி”


இதுதொடர்பாக ஹிமந்தசங்கா நீண்ட பதிவு ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பெரிய வெற்றி! ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் காரணமாக ஒரு உணவுப் பெருநிறுவனம் அதன் சர்க்கரை அளவைக் குறைத்தது வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம்! 1 வீடியோவால் சர்க்கரை அளவு 15% குறைக்கப்பட்டது. அனைத்து இந்தியர்களும் உணவு லேபிள்களைப் படிக்க ஆரம்பித்தால் என்ன நிகழும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.


நிறுவனங்கள் தங்களைப் பொய்யாகச் சந்தைப்படுத்தத் துணியாது. இந்தப் போராட்டம் போர்ன்விடாவிக்கு எதிரானது அல்ல. நொறுக்குத் தீனிகளை விற்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிரானது. 140 கோடி இந்தியர்களும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்பதே போராட்டம்! ஒவ்வொரு நிறுவனமும் இப்போது சற்று கவனமாக இருக்கும்” என ஹிமந்தசங்கா குறிப்பிட்டுள்ளார்.