நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் ஏற்கனவே அதிகப்படியான சர்க்கரை இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை  , அதாவது கரும்பு சர்க்கையை உணவில் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அடிக்கடி அறிவுறுத்துவார்கள்.  என்னதான் கட்டுப்பாடுடன் இருந்தாலும் கூட சர்க்கரையை உணவு பழக்கத்தில் இருந்து  முழுவதுமாக நீக்குவது என்பது சற்று கடினமான விஷயம்தானே. அதற்காகத்தான்  நீரிழிவு நோயாளிகள் பலர் சர்க்கரைக்கு மாற்றாக அல்லது செயற்கை இனிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள், அவை தேவையான இனிப்பை வழங்கும் கலோரிகளும் குறைவு. இதனை சுகர் ஃப்ரீ மாத்திரைகளாக பார்த்திருப்போம். இப்போது இயற்கையாக கிடைக்கும் ஸ்டீவியாத்தான் பலரின் தேர்வாக இருக்கிறது. 




வழக்கமான சர்க்கரைக்கு மாற்றாக ஸ்டீவியாவை பலரும் பயன்படுத்துகின்றனர். இது சர்க்கரை துளசி என அழைக்கப்படும் ரெபாடியானா தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு இயற்கை இனிப்பு ஆகும். சுவையைப் பொறுத்தவரை, ஸ்டீவியா சர்க்கரையை விட மிகவும் வலிமையானது. சாதாரண கரும்பு சர்க்கரையை விட 100 முதல் 300 மடங்கு இனிப்புச்சுவை அதிகம் உடையது. சிலர் ஸ்டீவியாவின் சுவை வித்தியாசமாக இருப்பதாகவும் ,. தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். சில ஆரோக்கியம் கருதி இந்த மாற்றை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இன்னும் இது சர்க்கரைக்கு மாற்றாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.


குறிப்பிட்ட சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் அமேசான் போன்ற வர்த்தக தளங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது . சரி  ஸ்டீவியாவை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து பார்க்கலாம்.


ஸ்டீவியாவில் சர்க்கரையில் இருப்பது போன்ற கலோரிகள் கிடையாது. சுத்தமாக தண்ணீரை போன்று பூஜ்ஜிய கலோரியை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.


இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் , நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்,கூடுதலாக, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய டேபிள் சர்க்கரை போலல்லாமல், ஸ்டீவியா அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


சில ஆய்வுகள் இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.




பற்சிதைவுக்கு வழிவகுக்கும் அமிலங்களை இது உருவாக்காது . எனவே ஈறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஸ்டீவியா பல்லுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பொதுவாக கரும்புச் சர்க்கரை நம் வாயில் இருக்கும் பாக்டீரியாவுடன் தொடர்புகொண்டு புளிக்கவைக்கிறது. இந்த நொதித்தல் வினையின்பொழுது  லாக்டிக் அமிலத்தை உருவாக்குகிறது, இது பற்சிப்பியின் துவாரங்கள் மற்றும் அரிப்புக்கு காரணமாகும். ஸ்டீவியா வேறுபட்ட இரசாயன அமைப்பைக் கொண்டிருப்பதாலும், வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்குடன் வித்தியாசமாக வினை புரிவதாலும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கிறது.