பிடித்த உணவு எதுவென்று ஒரு சர்வே எடுத்தால் பெரும்பாலானோரின் செலக்‌ஷன் பிரியாணியாகத் தான் இருக்கும். வெஜ், சிக்கன், மட்டன் என பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும் பிரியாணி என்று பொத்தாம்பொதுவான உணவை அடித்துக்கொள்ள இதுவரை உணவில்லை. குக்கிங் ஸ்டைலிலும் பிரியாணிகள் பல வகைகள் உண்டு. வெவ்வேறான அரிசி வகைகள், தம் பிரியாணி, மூங்கில் பிரியாணி, மண் பானை பிரியாணி, இலை பிரியாணி என ஏதேதோ வகை பிரியாணிகள் மணக்க மணக்க வெந்துகொண்டேதான் இருக்கின்றன. 


அந்த வகைகயில் இளநீர் பிரியாணியின் வீடியோ ஒன்று இணையத்தில் சக்கைபோடு போடுகிறது. இளநீர் பாயாசம் தெரியும். அது என்ன இளநீர் பிரியாணி என்றா கேட்கிறீர்கள். நல்ல இளநீரின் தண்ணீரை எடுத்துவிட்டு அதனுள் பிரியாணியை வைத்து அந்த தேங்காயுடன் பிசைந்து பிரியாணி பரிமாறப்படுகிறது. சுட சுட பிரியாணியும், மறுபக்கம் தேங்காயின் சுவையும் என இந்த பிரியாணியை சுவைக்க ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.




 அதேவேளையில் ''அடப்பாவிகளா.. இதெல்லாம் ஒரு பிரியாணியா?'' என முகத்தை திருப்பிக் கொண்டு ஓடுகின்றனர் ஒரு கும்பல். இது குறித்து பதிவிட்டுள்ள சிலர் ''பிரியாணி என்றாலே காரம்தான், தேங்காய் சேர்த்தால் இனிக்காதா?'' என கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னொருவர் ''இன்னும் என்ன என்ன பிரியாணி எல்லாம் வரப்போகிறதோ?'' என உச்சுகொட்டுகிறார். இன்னும் சிலர் ''இதெல்லாம் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இருக்கிறது. பைக் சைலன்சரிலும், பிவிசி குழாயிலும் பிரியாணி செய்வார்கள்'' என பங்கமாக கலாய்த்துள்ளனர்


மலேசிய பிரியாணி:



இளநீர் பிரியாணி அல்லது தேங்காய் பிரியாணி மலேசியாவில் புகழ்பெற்ற பிரியாணி ஆகும்.  Baby Coconut biriyani என்று அழைக்கப்படும் இந்த பிரியாணி இன்னும் இந்தியாவில் பிரபலமடையவில்லை. பிரியாணியை வெளுத்துவாங்கும் கூட்டமே இங்குதான் இருக்கிறது என்பதால் விரைவில் ஹோட்டல் மேசைகளில் இளநீரில் ஆவிபறக்கும் என எதிர்பார்க்கலாம்.






முன்னதாக,


2021ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த ரிப்போர்ட்டை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டது. அதில், “இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்தது. இந்த டிஷ் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. சிக்கன் பிரியாணிக்கான ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டன. இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.