ஆரோக்கியமாக வாழ்வது என்பது பல்வேறு வகையிலான உணவுகளை சமமாக உண்பதும், சில உணவுகளை முழுவதுமாக தவிர்க்காமல் இருப்பதும் உள்ளடக்கியதாகும். அதிகளவில் உண்பதால் பல்வேறு உடல் பிரச்னைகளை அளிப்பதாக சில உணவுகளைக் குறைப்பவர்கள் அதிகமாக உருவாகி வருகின்றனர். சில உணவு வகைகளை விலக்குவதால் நமக்கு நாமே ஊட்டச்சத்துகளைக் குறைத்துக் கொள்வதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சில டயட்களில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சர்க்கரை அளவு ஆகியவற்றை முழுமையாக உணவில் இருந்து நீக்கப்பட அறிவுறுத்தப்படுவது நம் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியது. 


அளவான உணவு என்பதே விடை!


நெய், வெண்ணெய் முதலான ஆரோக்கியமான கொழுப்புகளும் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தும் மக்களால் தவிர்க்கப்படுகிறது. மேலும், கொழுப்பு அதிகமாக உட்கொள்வது நம்மைப் பருமனாக்குவதோடு, பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும், உண்மையில் ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணாமல் தவிர்ப்பது இதய நோய் ஏற்படுவதற்கும், சில நேரங்களில் அதிக கொழுப்பு அளவில் உடலில் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.


புது டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவரும், மருத்துவருமான அசோக் சேத் இதுகுறித்து கூறிய போது, `நம் உடலுக்குக் கொழுப்புகள் தேவை.. நமது மூளை, நியூரான் அமைப்பு, நரம்புகள் முதலான அனைத்துமே கொழுப்புகளால் இயங்குகின்றன. சமமான ஊட்டச்சத்துகளைக் கொண்ட உணவுகளை உண்பதே சிறந்த டயர். ஃபாஸ்ட் ஃபுட்டில் இருக்கும் மீண்டும் மீண்டும் நெருப்பில் சுடுவதால் உருவாகும் டிரான்ஸ் வகை கொழுப்பே தவிர்க்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். 


மேலும், உணவு விவகாரத்தில் தவறாக கையாளப்படும் சில கருத்துகளின் உண்மைத் தன்மையை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ வல்லுநர் டிக்ஸா பாவ்சர். 



அரிசி உடல் எடையை அதிகரிக்கிறதா?


`அரிசி உடல் எடையை அதிகரிப்பதில்லை. ஆனால் நமது பேராசை அதனைச் செய்கிறது. அரிசி உணவைத் தினமும் அளவாக உண்டால், உடல் எடை அதிகரிப்பதில்லை. என்னுடைய வாடிக்கையாளர்களில் உடல் எடையைக் குறைக்க வருபவர்களுக்கு நான் அரிசி கிச்சடியைப் பரிந்துரைக்கிறேன். என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் ஆகிய அனைத்து கேள்விகளுமே சமமான முக்கியத்துவம் பெருகின்றன. தினமும் பாஸ்மதி அரிசி வகையை உண்ணும் வழக்கம் கொண்டவர்கள் பருமனாவதும், நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு உள்ளாவது, இதய நோயாளிகளாவது சாத்திடம். பிரவுன் அரிசி, சிவப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி ஆகியவை எளிதில் செரிமானம் ஆகின்றன. எனவே அவை உடல் எடையை அதிகரிப்பதில்லை. எனவே உங்கள் அரிசியை அறிவோடு தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிறார் மருத்துவர் டிக்ஸா பாவ்சர். 



மாம்பழம் உண்பது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறதா?


`மாம்பழம் மட்டுமின்றி, வாழை, சீதாப்பழம் முதலான எந்த இனிப்புப் பழங்களும் நீரிழிவு நோயை ஏற்படுத்துவதில்லை. தேவையை விட அதிகமான உணவை உண்ணும் பேராசையே நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. மேலும் உடற்பயிற்சியைத் தவிர்ப்பது, சொகுசான வாழ்க்கைமுறையை வாழ்வது ஆகியன நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன’ எனக் கூறியுள்ளார் மருத்துவர் டிக்ஸா பாவ்சர். 


நெய் உண்பது கொழுப்பைக் கூட்டுகிறதா?



`நெய் உண்பது கொழுப்பைக் கூட்டவில்லை; அதனை மேம்படுத்துகிறது. ஏ2 மாடுகளின் நெய் உடலில் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதுடன் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ,டி,ஈ, கே ஆகியவற்றை உடலில் அதிகரிக்கிறது. எருமை மாட்டின் நெய் உண்பது உடல் எடையை அதிகரிப்பும் வாய்ப்பு இருக்கிறது. உடல் மெலிவாக இருந்து எடை கூட்ட விரும்புவோர் அதனைப் பயன்படுத்தலாம்’ என்றும் கூறியுள்ளார் மருத்துவர் டிக்ஸா பாவ்சர்.