ஆதி காலம் தொட்டு நமது வீடுகளில் சிறந்த மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் இந்த ஓமம். இது மசாலா வகைகளில் சேர்க்கப்பட்டாலும் பொதுவாக வீடுகளில் இன்றளவும் இது ஒரு மருந்து பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஓமத் தண்ணீர் வயிற்றில் ஏற்படும் அனைத்து வலி உபாதைகளுக்கும் அரு மருந்தாக செயல்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு நிவாரணியாக இந்த ஓமம் செயல்படுகிறது. தற்போதும் கடைகளில் ஓம வாட்டர் என சிறு குழந்தைகளுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்யப்படுகிறது. குழந்தை வீட்டில் ஏன் அழுகிறது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் வேளையில் இந்த ஓம தண்ணீரை கொடுக்கும்போது குழந்தை குதூகலமாகிவிடும்.
இரைப்பை பிரச்சினை, வயிற்று வலி, குடல் இரைச்சல், பல் நோய் என பலவற்றுக்கு அருமருந்தாக இந்த ஓமம் செயல்படுகிறது.
உடலில் ஏற்படும் அஜீரணம், செரிமான பிரச்சனை என்பது பொதுவானவை என்றாலும் அது காலப்போக்கில் பல்வேறு பக்க நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே ஆரம்பத்திலேயே அவற்றை சரி செய்ய இந்த ஓமத்தண்ணீர் சிறப்பாக செயல்படுகிறது.
தவறான உணவு பழக்க வழக்கம் நமது குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும் என யாவரும் அறிவோம் .ஆனாலும் அந்த தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஆகவே அவற்றிலிருந்து நாம் தப்பிக்கும் வகையில் நமக்கு உதவுவது ஓமம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்தா முறைகளில் வயிற்றில் ஏற்படும் வாயு தொந்தரவு முதல் வலி அமிலத்தன்மை என அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாகவே இந்த ஓம தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
இந்த ஓமத்தில் இருக்கும் பல நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்வதாக கூறப்படுகிறது. இது செரிமான அமைப்பை சீராக வைப்பதோடு, உடலில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.
1. ஓமம் மற்றும் எலுமிச்சை சாறு:
செரிமான பிரச்சனையை சரி செய்ய ஓமம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் இந்த எலுமிச்சை சாறு மற்றும் ஓமம் கலந்த பானத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது எளிதாக செரிமானம் அடைகிறது. ஜீரணமடையாத புரத உணவுகளை விரைவில் செரிமானம் அடையச் செய்கிறது. அதேபோல் அதிகளவான வாய்வு காரணமாக வயிறு வீங்கினால் அதனை ஓமம் சரி செய்கிறது.
ஒரு ஸ்பூன் ஓமத்தூள் மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து தேவையானால் நீர் சேர்த்துக் கொள்ளலாம் .அதில் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து கலந்து குடிக்கவும். மிகவும் அஜீரணமாக இருக்கும்போது ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
2. ஓமம் மற்றும் இஞ்சி தூள் கலவை:
நீண்ட நாட்களாக அஜீரணம் மற்றும் வாய்வு பிரச்சனை இருந்தால் இந்த ஓமம் மற்றும் இஞ்சி தூள் கலவை அதிலிருந்து நிவாரணம் அளிக்கும். ஓமத்தில் இருக்கும் நுண்ணுயிர் பண்புகள் வயிற்று சுழற்சியை சரி செய்கிறது. அதிகளவான வாயு மற்றும் அஜீரண தன்மையை நீக்கி உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் அதிகளவாக உள்ள கொழுப்பையும் இந்த ஓமம் குறைக்க உதவுகிறது. உணவுக்குழாய், இரைப்பை மற்றும் குடல் புண்களை இந்த ஓமத் தண்ணீர் சரி செய்கிறது. உடலுக்கு தேவையான வளர்ச்சிதை மாற்றத்தை இது மேம்படுத்துகிறது.
கொஞ்சம் ஓம விதைகள் மற்றும் உலர்ந்த இஞ்சியை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு பொடி செய்த தூளை நன்கு கலக்கவும். அதில் ஒரு சிட்டிகை தேவை என்றால் உப்பு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தமான தொல்லைகள் தீரும்.
3. ஓமத் தேநீர்:
அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையில் இருந்து விடுபட ஓம தேநீர் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். உடலில் இருந்து அதிக நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. இந்த ஓமத் தேநீரை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வயிற்றில் உள்ள அதிகளவான கொழுப்பு கரைந்து தட்டையான வயிறாக மாறவும் உதவி செய்கிறது.
ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து
வடிகட்டி அருந்தவும்.
4. ஓமம் மற்றும் பெருங்காயத்தூள்:
பெருங்காயத்தூள் மற்றும் ஓமம் இரண்டுமே வயிற்றில் உள்ள வாயு பிரச்சனையை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மருந்து மாத்திரைகளுக்கு சரியாகாத செரிமான பிரச்சனைகள் இந்த ஓமம் பெருங்காயத் தூளை எடுத்துக் கொள்ளும்போது முற்றிலும் குணமடைகிறது.
அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் அதனுடன் மூன்று சிட்டிகை பெருங்காயத்தூளை சேர்த்துக் கொள்ளவும். இதனை வாயில் போட்டு தண்ணீரின் உதவியுடன் விழுங்கி விடவும் .இதனைத் தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் உடலில் வாயு பிரச்சனை என்பது முற்றிலுமாக நீங்கிவிடும்.
5. அதேபோல் ஓமத்தை உங்களது அன்றாட உணவுகளில் கலந்து சாப்பிடலாம். சப்பாத்தி, தோசை மற்றும் காலை, மதிய உணவுகளில் சிறுசிறு அளவாக சேர்த்துக் கொள்ளும் போது அஜீரண கோளாறு என்பது உடலில் ஏற்படாது. அதேபோல் செரிமானத்தை சரி செய்து உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும். மேலும் நாம் அதிகளவாக உட்கொள்ளும் எண்ணெயில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் இந்த ஓமம் குறைத்து விடும்.
ஆகவே நல்ல பசியும், தூக்கமுமே ஒரு மனிதனின் சிறந்த உடலுக்கான ஆதாரமாகும். ஆகவே இவ்வாறான ஓமத் தண்ணீரை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உடல் சமநிலை பெற்று நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
இவை வெறும் வீட்டு மருத்துவம் மட்டுமே, என்றாவது தோன்றும் அஜீரண கோளாறுகளுக்கு மட்டுமே ஓமம் பயன்படுத்தலாம். தொடர்ச்சியாக இந்த பிரச்சனை தொடர்ந்தால், கேஸ்ட்ரோ எண்டீராலஜிஸ்ட் நிபுணரை அணுகவும்