உருளைக்கிழங்கு யாருக்குத்தான் பிடிக்காது. எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸ் முதல் தேங்காய் பால் சாதத்திற்கு நல்ல காம்பினேசனாக இருக்கும் உருளை ரோஸ்ட் வரை - இதை யாரும் ஃபேவரைட் இல்லை என்று சொல்ல முடியாது. அதுவும், குழந்தைகள் ‘யெஸ்’ சொல்லும் ஒரு காய்கறி என்றால் உருளைக் கிழங்காக மட்டுமே இருக்கும். அந்த அளவிற்கு உணவில் தவிர்க்க முடியாத டிஷ் ஆக இருப்பது உருளைக் கிழங்கை வைத்து செய்யும் உணவு. ரவுண்டாக நறுக்கி அதை தோசை கல்லில் மீன் பொரிப்பதுபோல செய்யும் உருளை ரோஸ்ட்...ப்ப்பா.. இதை எழுதும்போது அதன் சுவையை நம் கற்பனையில் உணர முடியும். உருளைக் கிழங்கை வைத்து பல்வேறு டிஷ்கள் செய்தாலும், இந்த ராஜஸ்தானி ஆலு டிஷ் நிச்சயம் உங்கள் ஃபேவரைட்டாக மாற வாய்ப்புள்ளது.
ஆலு இராஜஸ்தானி ரெசிபி
தேவையான பொருட்கள்:
- உருளைக் கிழங்கு - 10
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- சோம்பு-1 டீஸ்பூன்
- மல்லி - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- சாட் மசாலா - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து மசிக்கவும். அதோடு, தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து மசிக்கவும். கோதுமை மாவு பதத்தில் இருக்க வேண்டும். உருளை மசியலை சிறு சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். வாணலியில் மீன் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். இது டீப் ஃபரை அல்ல. இதை ஷேலோ ஃப்ரை செய்ய வேண்டும். சிறு சிறு உருண்டைகளை எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். இதை ஒரு புறம் இருக்கட்டும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் வெந்தயம், சோம்பு, மல்லி,சீரகம் உள்ளிட்டவற்றை வறுத்து எடுக்கவும். கொஞ்சம், ஆறியதும் மிக்ஸியில் பொடியாக்கவும்.
இப்போது, ஆலு இராஸ்தானி செய்தற்கு பாதி வேலை முடிந்தது. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதில் பொரிந்த்த உருளை கிழங்கை சேர்க்கவும். இதில் பொடித்து வைத்த மசாலா, அதோடு சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான்.. ஆலு ராஜஸ்தானி ரெடி... சுட சுட சுவைக்கவும்..
உருளைக்கிழங்கு சாப்பிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
உருளை கிழங்கு பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகளும் ஒன்று. இதில் அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் உள்ளது. உடல் எடை குறைய வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் உருளையை அடிக்கடி சாப்பிடுதை தவிர்க்க வேண்டும்.
வைட்டமின் B1, B2, B3 நிறைவாகக் கொண்டது. உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். மூளைக்கு சுறுசுறுப்பு அளித்து சோர்வை தளர்த்தும்.
ஆனால், ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உணவில் சேர்த்து கொள்ள் வேண்டும். வாயு தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி உருளைக்கிழங்கை வைத்து டிஷ்கள் செய்வதை தவிர்க்கவும்.
முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது.