தேவையான பொருட்கள்:


பச்சரிசி – 1/2 கிலோ, பாகு வெல்லம் 1/2 கிலோ,  தேவையான அளவு எண்ணெய். ( மாவு பச்சரிசி என்று கடையில் கேட்டு வாங்க வேண்டும். )


செய்முறை


முதலில் பச்சரிசியை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, நான்கு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த அரிசியில் இருந்து தண்ணீரை சுத்தமா வடிகட்டிவிட வேண்டும்.


இந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


மாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1/2 கிலோ அளவு வெல்லத்தை, தூள் சேர்க்க வேண்டும்.


இந்த வெல்லத்தோடு கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கரண்டியால் கிளறி விட வேண்டும். வெள்ளம் முழுமையாக கொதி வந்த பிறகு, பாகு பதத்திற்கு வந்து விட்டதா என பார்க்க வேண்டும்.


பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் சேர்க்க வேண்டும். மாவை சேர்க்கும் போது கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மாவு கட்டிப்பட்டு விடும். 


மாவை பாகில் கட்டி பிடிக்காமல் கலந்து விட்ட பிறகு தேவைப்பட்டால் ஏலக்காய் தூள் சுக்கு தூள் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்பு மீண்டும் நன்றாக மாவை கலக்கி விட வேண்டும். அதிரச மாவை சூட்டோடு மூட கூடாது. எனவே ஆறிய பின் மூடி வைக்க வேண்டும். 


இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விட வேண்டும். 8 மணி நேரம் கழித்து, அந்த மாவை, எடுத்து அகலமான தட்டில் போட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.


வாழை இலை இருந்தால் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.


வாழை இலை இல்லாதவர்கள் பால் கவர் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற ஏதாவது ஒரு கவரை சதுர வடிவில் வெட்டிக் கொண்டு, அதில் கொஞ்சம் எண்ணையை தடவிக் கொண்டு ஒவ்வொரு அதிரச உருண்டைகளாக எடுத்து தட்டி, சுட்டு எடுத்தால் சுவையான அதிரசம் தயார். இதை ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.