சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உத்தமசோழபுரம் - திருச்செங்கோடு செல்லும் சாலையில் ஆட்டையாம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக முறுக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குடிசை தொழில் மூலம் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் முறுக்கு தயாரிக்கின்றனர். உங்க தயாரிக்கப்படும் முறுக்குகள் வெளி மாநிலங்கள் முதல் வெளி நாடுகள் வரை அனுப்பப்படுகின்றன.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முறுக்கு:
இந்த கிராமத்தில் தயாரிக்கப்படும் முறுக்குகள் சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குறிப்பாக அருகில் உள்ள நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்கள் ஆட்டையாம்பட்டி முறுக்கை வாழ்ந்து செல்கின்றனர். ஆட்டையாம்பட்டியின் தயாரிக்கப்படும் முறுக்கு அமெரிக்கா, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆட்டையாம்பட்டி முறுக்கின் சிறப்பு:
முறுக்கு என்றால் அச்சுக் கொண்டு உருவாக்கப்படும். ஆனால் ஆட்டையாம்பட்டியின் தயாரிக்கப்படும் முறுக்குகள் முழுமையாக இயந்திரங்கள் உதவி இல்லாமல் செய்யப்படுகிறது. முறுக்கிற்கு மாவு அரைப்பது முதல் முறுக்கை கையில் சுற்றுவது வரை இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகிறது. இதனால் மற்ற இடங்களில் கிடைக்கும் உருக்கை விட ஆட்டையாம்பட்டி முறுக்கு சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டையாம்பட்டி முறுக்கில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களான ஓமம், மிளகு, இடித்த கடலை மாவு உள்ளிட்டவை மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் செரிக்கும் தன்மையை அதிகரிக்கும் உணவாக உள்ளது. சுத்தமான எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுவதால் ஆட்டையாம்பட்டி முறுக்கு ஒரு மாதம் வரை கெடாமல் இருக்குமாம்.
ஆட்டையாம்பட்டி முறுக்கின் ரகசியம்:
ஆட்டையாம்பட்டிகள் தயாரிக்கப்படும் முறுக்குகள் கார அரிசியை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதேபோன்று முறுக்கு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் அனைத்தும் ஆண்டிற்கு ஒருமுறை வாங்கி உலர வைக்கப்படுகிறது. இதனால் மிளகு, மிளகாய் போன்ற பொருட்களின் கார தன்மை நன்றாக இருக்குமாம். மேலும், இயந்திரங்கள் உதவி இல்லாமல் செய்வதால் முறுக்கு ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கின்றது.
முறுக்கு பிரியர்கள் கூறுகையில்:
ஆட்டையாம்பட்டி முறுக்கு மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கடித்து சாப்பிடும் பதத்தில் சுவையாக இருக்கின்றது. சுக்கு, மிளகு மற்றும் ஓமம் கொண்டு தயாரிக்கப்படுவதால் எளிதில் செரிமானம் ஆகிறது. இதனால் அனைவரும் ஆட்டையாம்பட்டி முறுக்கை விரும்பி சாப்பிடுவர். திருச்செங்கோடு வழியாக சேலம் வருபவர்கள் கண்டிப்பாக ஆட்டையாம்பட்டியில் முறுக்கு வாங்காமல் செல்ல மாட்டார்கள். ஒரு முறை ஆட்டையாம்பட்டி முறுக்கு சுவைத்தாள் போதும், அதன் பிறகு முறுக்கு சாப்பிடுவதற்காகவே இங்கு வருவார்கள். ஆட்டையாம்பட்டி முறுக்கை இங்குள்ளவர்கள் வெளிநாட்டில் உள்ள தங்களது உறவினர்களுக்கு வாங்கி செல்வார்கள். முறுக்கு மட்டுமின்றி தட்டு வடை, அதிரசம் போன்ற பலகாரங்களும் இங்கு விற்கப்படுகின்றது. அதற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆட்டையாம்பட்டியில் ஒரு முறுக்கின் விலை இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் வருபவர்கள் கண்டிப்பாக ஆட்டையாம்பட்டி முறுக்கு சுவைத்து பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.