கோடை வெயில் வந்துவிட்டது. காய்ச்சிய பாலை 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க மறந்துவிட்டால் அது புளித்து தயிராகிவிடும். அப்படியிருக்க தயிரை வைத்தால் அது என்னவாகும். கோடையில் தயிர் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆனால் மீதமாகும் தயிரை மோராக்கி குடித்தாலும் மிஞ்சிவிடுகிறதே, புளித்துவிடுகிறதே. அதை என்ன செய்யலாம் என்ற ஐயம் நிறைய பேருக்கு இருக்கும்.


1. மாவு நொதிக்கச் செய்யலாம்.. பிரெட், பரோட்டா இல்லை தோசை மாவு என எதுவாக இருந்தாலும் அது நொதிப்பதற்கு நாம் கொஞ்சம் ஈஸ்ட் சேர்ப்போம் அல்லவா. அதற்குப் பதிலாக புளித்த தயிரைப் பயன்படுத்தலாம். பட்டூராஸ் மாவு முதல் புளித்த மாவு வரை எல்லா மாவுக்கும் இந்த புளித்த தயிரைப் பயன்படுத்தினால் பதமாக நொதித்து வரும்.


2. சீஸ் க்ரீம்: க்ரீம் சீஸ் என்பது எப்போதுமே ஃப்ரைஸ், சிக்கன் விங்ஸ், சாலட்ஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு இது நல்ல காம்போ. இதில் ஒருவித டேங்கி சுவை இருக்கும். ஆகையால் புளித்த தயிரில் இருந்து க்ரீம் சீஸ் தயார் செய்யலாம். 


3. மோர்: தயிர் புளித்துவிட்டால் எளிதில் செய்யக்கூடிய பானம் மோர். நன்றாக தண்ணீர் சேர்த்து கூடவே பச்சை மிளகாய், மாங்காய், இஞ்சி, கருவேப்பிலை, சிறிது துருவிய கேரட் என நம் விருப்பதிற்கு ஏற்ப சேர்த்து மோர் தயாரிக்கலாம். 


4. தயிர் சாதம்: அட இந்த வேலை எல்லாம் என்னால செய்ய முடியாதுங்க என்று கறார் காட்டினீர்கள் என்றால் ஈஸியா தயிர் சாதம் பண்ணிடுங்க. தயிர் சாதம் செய்வது ஒரு கலைங்க. அதாகப்பட்டது. புளித்த தயிர், தண்ணீர் கலக்காமல் காய்ச்சி ஆறவைத்த பால். குலைவாக வடித்துவைத்த சாதம். ஆறிய சாததை ஒரு பெரிய பேஸினில் போட்டு கொஞ்சம் மத்தால் மசித்து விட்டுக் கொள்ளவும். தயிர், பால், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி அது கொதித்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி துருவியது, ஃப்ரெஷ்ஷான கருவேப்பிலை என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். தாலிதம் ஆனதும் கடைசியாக பெருங்காயத்தை தாராளமாக சேர்க்கவும். காயம் கரிந்துவிடக் கூடாது. மனம் வந்தவுடம் எல்லாவற்றையும் தூக்கி தயிர் சாதத்தின் தலையில் போட்டு கிளறிவிட்டு விரும்பினால் கொஞ்சம் மாதுளை முத்துக்களை அப்படியே மலைச்சாரலில் விழும் ஆலங்கட்டி போல் தூவிவிட்டு ஒரு பவுலில் எடுத்து வைத்து சாப்பிட்டால். அட அட அட என உச்சுக் கொட்டுவீர்கள். உங்கள் புளித்த தயிர் இப்படி உருமாறிவிட்டதே என உள்ளம் உருகிப்போகும்.


5. மோர்க்குழம்பு.. காடி புளித்த தயிர் தான் மோர்க்குழம்புக்கு சிறப்பான மூலப்பொருள். புளித்த தயிரை நன்றாக தண்ணீர் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய், பச்சை மிளகாய், பொரி கடலை, இஞ்சி, ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், சீரகம், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் என எல்லாவற்றையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். வானலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாலிதம் செய்து அதில் அரைத்த கலவையை சேர்க்கவும். அந்தக் கலவை நன்றாக வதங்கி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு மோரை ஊற்றி நன்றாக கிளறவும் மோர்க்குழம்பு தயார்.


6.தஹி ஆலு: புளித்த தயிர் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு உருளைக்கிழங்கு மசால். இதற்கு பேபி பொட்டேட்டோஸை நன்றாக வேகவைத்து நறுக்கிக் கொள்லவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது. ஒரு பச்சை மிளகாய் நறுக்கியது. ஒரு பல் பூண்டு தட்டியது என எல்லாவற்றையும் வதக்கவும். அது வதங்கியவுடன் அதில் கொஞ்சம் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கரம் மசாலா, சீரகத் தூள் என எல்லாவற்றையும் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதில் உருளைக்கிழங்கப் போட்டு பிரட்டவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு க்ரீம் பதத்திற்கு விஸ்க் செய்து கொள்ளவும். அதை நன்றாக சூடாக இருக்கும் உருளை கிரேவியில் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க வைக்கவும். அடுப்பில் ரொம்ப நேரம் வைத்தால் தயிர் திரிந்துவிடும்.


7. ஊத்தப்பம்: தோசை மாவில் புளித்த தயிரை சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு அதை தோசை மாவில் சேர்த்து.கூடவே இஞ்சி துருவியது. மிளகு சீரகம் ஒன்றிரண்டாக நுணுக்கியது. வெங்காயம் பொடிதாக அரிந்தது என எல்லாவற்றையும் சேர்ந்த்து ஒரு கப்பில் அந்த மாவை எடுத்து தோசைக் கல்லில் ஊறி வார்த்து எடுத்தால் ஊத்தப்பம் தயார். 


8. ரவா தோசை: தோசை மாவில் புளித்த தயிரை தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு அதை தோசை மாவில் சேர்த்து. கொஞ்சம் ரவை கலந்து. கூடவே இஞ்சி துருவியது. மிளகு சீரகம் ஒன்றிரண்டாக நுணுக்கியது. வெங்காயம் பொடிதாக அரிந்தது என எல்லாவற்றையும் சேர்ந்த்து ஒரு கப்பில் அந்த மாவை எடுத்து தோசைக் கல்லில் ஊறி வார்த்து எடுத்தால் ரவா தோசை தயார்.