காலையில் விடிந்ததும் என்ன டிபன் செய்யலாம் என்பது தான் பெரும்பாலான பெண்களின் இரவுப் படுக்கையின்போதான ப்ளானாக இருக்கும். சிலருக்கு ஃப்ரிட்ஜில் மாவு இல்லாவிட்டால் அடுத்த நாளை காலை டிபன் டென்ஷன் பலமடங்கு அதிகரித்துவிடும். அப்புறம் பெரும்பாலும் எல்லா வீட்டிலும் யாருக்கேனும் ஒருவருக்காவது டயபடீஸ், கொலஸ்ட்ரால் என லைஃப்ஸ்டைல் நோயும் இருந்துவிடுகிறது. அப்படியான வேளையில் எந்த டிபன் செய்வது என்பது இன்னும் பெரிய தலைவலி.
அப்படியான வேளையில் அவசரத்துக்கு கை கொடுக்கும் டிபன் ரெஸிபி தான் ஃப்ளாக்ஸ் சீட் பராத்தா. ப்ளாக்ஸ் சீட் என்பது அதிகமான டயட்டரி ஃபைபர், புரதம், ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், பாலி அன்சேச்சுரேடட் ஃபேட்டி ஆசிட்ஸ், ஓமேகா 3 எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டது. இது செய்வதும் எளிது. ருசியும் அலாதியானதாக இருக்கும்.
வாங்க ஃப்ளாக்ஸ் பராத்தா ரெஸிபியைப் பார்க்கலாம்:
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு: 2 கப்
வறுத்த ஃப்ளாக்ஸ் சீட்: கால் கப்
வெல்லம்: அரை கப் துருவியது
பால்: 2 ஸ்பூன்
எண்ணெய்: 1 டீ ஸ்பூன்
நெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
ஃப்ளாக்ஸ் சீட் (ஆளி விதைகளை) முதலில் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அதை பேனில் போட்டு குறைந்த தீயில் வைத்து வறுக்கவும். பின்னர் அதை குளிர்விக்கவும். அதன்பின்னர் அதை மிக்ஸரில் போட்டு பவுடராக பொடித்துக் கொள்ளவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் துருவிய வெல்லத்தையும், பாலையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது இன்னொரு மிக்ஸிங் பவுலில் 2 கப் கோதுமை மாவு போடவும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசையவும். பராத்தா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அந்த மாவை ஒரு துணி போட்டு மூடி 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர் மாவை சிறு உருண்டைகளாகப் பிடித்து தேய்த்துக் கொள்ளவும். பின்னர் அதன் மீது ஏற்கெனவே தயார் செய்துவைத்த பூரணத்தை உள்ளே வைக்கவும். அதன் பின்னர் ஓரங்களை இழுத்து மடித்துவிட்டு பின்னர் மீண்டும் தேய்க்கவும். தேவைக்கேற்ப மடித்து மடித்து லேயர் ஏற்படுத்திக் கொள்ளலாம். பின்னர் பராத்தாவை சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் ஃப்ளாக்ஸ் சீட் பராத்தா தயார்.
இது ஆரோக்கியமானது மட்டுமல்ல மிகவும் சுவையானதும் கூட. இதை நீங்கள் சுட்டு அடுக்கினால் ஐந்தே நிமிடங்களில் காலியாகிவிடும். ஆளிவிதையுடன் கொஞ்சம் எள்ளும் சேர்த்து பூரணத்தை செய்யலாம். அதற்கான ரெஸிபி கீழே இன்ஸ்டாகிராம் பதிவில் உள்ளது.