கோடை வெயில் கொளுத்துகிறது. எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. உடல் சூடு தாங்கவே முடியவில்லை, கண் எரிகிறது என கோடையின் குமுறுல்கள் தொடங்கிவிட்டன. சாப்பாடே வேண்டாம் ஏதாவது நீர் ஆகாரமாக எடுத்துக் கொண்டால் போதும் என்று தோன்றும் என்றளவுக்கு தாகம் வாட்டி வதைக்கிறது. உண்மையில் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது கோடையில் மிகவும் அவசியம். அதற்காக நாங்கள் சில ரெஸிபிகளை உங்களுடன் பகிர்கிறோம்..
வாட்டர்மெலன் அகுவா ஃப்ரெஷ்கா..
அட என்ன இது பெயரே வாயில் நுழையவில்லையே என்று நினைக்க வேண்டாம். இது தர்பூசணி லெமன் ஜூஸ். அவ்வளவுதான். கோடையில் பிரதானமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. வழக்கமான தர்பூசணி ஜூஸ் இல்லாமல், தர்பூசணி உடன் சிறிது லெமன் சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். சுவை வித்தியாசமாக இருந்தாலும் புத்துணர்ச்சியளிக்கும் பாணம் இது. இதில் தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பீச்ட் ஐஸ் டீ:
சிலருக்கு ப்ளாக் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அதையே கொஞ்சம் கூலாகக் குடித்தால் எப்படியிருக்கும். கூடவே கொஞ்சம் பீச் சேர்த்து அருந்திப்பாருங்களேன். அதுதான் பீச்ட் ஐஸ் டீ. இதற்கு கொஞ்சம் பீச் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேநீரில் சேர்த்து கூடவே கொஞ்சம் தேன் அல்லது அகேவ் சிரப் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு அது குளிர்ந்தவுடன் பகிரவும்.
மாம்பழ லஸ்ஸி:
நல்ல பழுத்த மாம்பழத் துண்டுகளுடன் ஃப்ரெஷ் யோக்ஹர்ட், பால் சேர்த்து ப்ளண்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். அதில் தேவைக்கும் ருசிக்கும் ஏற்ப தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் இன்னும் அதிகமாக சுவையாக இருக்கும். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் அருந்தலாம்.
பைனாப்பிள் கோக்கநட் ஸ்மூத்தி:
ஜூஸ் பிடிக்காதவர்கள் கோடையில் ஸ்மூதி அருந்தலாம். அதுவும் நறுமணம் நிறைந்த அன்னாசிபழம் ஸ்மூத்தி செய்து அருந்திப் பாருங்கள். அப்புறம் உங்கள் நா அதற்கு அடிமையாகிவிடும். தேங்காய்ப் பாலுடன் அன்னாசிப்பழ துண்டுகளை சேர்க்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஐஸ்கட்டிகள் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் அதில் கொஞ்சம் துருவிய தேங்காயும், பைனாப்பிள் துண்டுகளும் சேர்த்துப் பறிமாறவும்.
ரேஸ்ப்பெர்ரி லெமனேட்:
லெமன், சர்க்கரை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு ஜூஸ் போட்டு குடிக்கலாம். உடல் உஷ்னத்தை இது தணிக்கும். இதை லெமனேட் என்பார்கள். இத்துடன் கொஞ்சம் ரேஸ்ப்பெர்ரி சேர்த்துக் கொண்டு ப்ளெண்டரில் சேர்த்து அடித்து வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால் ரேஸ்ப்பெர்ரி லெமனேட் தயார்.
ஸ்ட்ராபெர்ரி துளசி லெமனேட்:
லெமனேட் தயார் செய்தி அதிலேயே கொஞ்சம் துளசி, ஸ்ட்ராபெர்ரீஸ் சேர்த்து ப்ளெண்டரில் நன்றாக சுத்தவும். வடிகட்டி ஐஸ் போட்டு பருகலாம்.
ப்ளூபெர்ரி புதினா லெமனேட்:
லெமன், புதினா, சர்க்கரை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு ஜூஸ் போட்டால் அதுதான் புதினா லெமனேட். அந்த புதினா லெமனேட் உடன் கொஞ்சம் ப்ளூபெர்ரீஸ் சேர்த்து அதனை ப்ளெண்டரில் போட்டு வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகலாம்.
கோடை காலத்தில் கார்பனேட்டட் பாட்டில் டிரிங்குகளை அருந்துவதைவிட இந்த சம்மர் டிரிங்கஸை வீட்டிலேயே தயாரித்துப் பருகினால் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். மேலும் வெயிலில் இருந்து வரும்போது இந்த ஜூஸ்களை குடித்தால் உடல் சோர்வாக இருந்தாலும் புத்துணர்ச்சியை அளிக்கும்