பீட்சா என்றதும் குழந்தைகளுக்கு 'நோ' சொல்வது நம்மூரில் எழுதப்படாத விதி. அந்த உணவெல்லாம் சாப்பிடக் கூடாது, உடலுக்கு கெடுதல் என்று கூறியே நம் சமூகம் வளர்க்கப்பட்டுள்ளது. மேற்கத்திய உணவுகள் நம்மூருக்கு செட் ஆகாது என்றெல்லாம் கூறி இன்றளவும் கூட முயற்சியே செய்திடாதவர்கள் இருக்கக்கூடும். எப்படியாவது சாப்பிட்டே தீருவேன் என்று காக்கா முட்டை சிறுவர்கள் போல தேடி உண்டவர்களும் இருக்கலாம். ஆனால் பீட்சா ஒன்றும் வெறுக்கத்தக்க, வாயிலேயே வைக்கக்கூடாத உணவு அல்ல. அதன் மூலம், உடலுக்கு எந்த குறிப்பிட்ட நோயும் வருவதாக நிரூபிக்கப் படவில்லை. அதில் நாம் சேர்த்துக்கொள்ளும் பொருட்களே விவாதத்திற்குள்ளாகின்றன. ஆனால் பீட்சாவிலும் கால்சியம், ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் உள்ளன. உணவுகள் அனைத்திலும் நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றன தான். எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது. வாரம் ஒரு முறை பீட்சா சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 


தக்காளி சாஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது


பீட்சாவில் உள்ள தக்காளி சாஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கிருமிகளை எதிர்த்துப் போராடவும், சளி அல்லது இருமல் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றவும் இந்த ஊட்டச்சத்து உடலுக்குத் தேவைப்படுகிறது. சாஸில் ஆரிகேனோ சேர்த்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகரிக்கும். ஆரிகேனோவில் அதிகம் இருப்பது, கார்வாக்ரோல் ஆகும், அது கல்லீரலை ஆரோக்கியமாகவும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!



கால்சியம் நிறைந்தது


உங்கள் உணவில் அதிக கால்சியம் பெற சீஸ் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் சீஸ் பாலில் இருந்து செய்யப்படும் பொருளாகும், எனவே அது கால்சியத்தின் நல்ல மூலமாகும். பீட்சாவில் சீஸில் மட்டுமல்ல, தக்காளி சாஸிலும் கால்சியம் உள்ளது. ஒரு துண்டு சீஸ் பீட்சாவில் சுமார் 219 மில்லிகிராம் கால்சியம் உள்ளது, இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது, அதே நேரத்தில் தசைகள் சரியாக செயல்படவும் உதவுகிறது. பெரும்பாலும் பீட்சாவில் குறைந்த கொழுப்புள்ள சீஸ் சேர்க்க முயற்சி செய்யுங்கள், குறைந்த கலோரிகள், கொழுப்புகள் சேர்த்துக்கொள்வதே உடலுக்கு நல்லது.


ஆரோக்கியமான டாப்பிங்ஸ்


பீட்சா ரெசிபி ஆரோக்கியமானதா இல்லையா என்பது நீங்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தது. வீட்டிலேயே பீட்சா தயாரிக்கும் போது, ஆரோக்கியமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும். ஆரோக்கியமான காய்கறிகள், சிறிதாக வெட்டப்பட்ட இறைச்சிகள், பழங்கள், கிரீமி சாஸ் மற்றும் புரதங்களைச் சேர்ப்பது அவசியம். முடிந்த வரையில் மேலே இடும் பொருட்களின் உயரம் குறைவாக இருப்பதற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். குண்டான பீட்சா சாப்பிடுவதன் மூலம், அதிக கலோரிகள் உடலில் சேரும். 



நவ தானிய பீட்சா


நவ தானிய பீட்சா, உடலின் தினசரி ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. அதாவது இந்த நவ தானிய பீட்சா பேஸ், வழக்கமான பீட்சா பேசோடு ஒப்பிடும் போது குறைந்தபட்சம் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளது. அதனால் அதிக சக்தி உடலுக்கு கிடைக்கும். 


உடனடியாக சாப்பிடக்கூடியது


அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனும்போது, சமைக்க நேரம் இல்லை எனும்போது, எளிதாக பீட்சாவை ஆர்டர் செய்து உடனடியாக சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். வெளியில் வாங்கினாலும் முடிந்தவரையில் ஆரோக்கியமான டாப்பிங்ஸைச் சேர்க்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இது உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான, நார்ச்சத்து, புரதத்தை வழங்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.