நம்மில் அனைவரும் எப்போதாவது ஏதேனும் வலியை உணர்வது வழக்கம். முதுகுவலி, பல் வலி, உடல் வலி, தசைப்பிடிப்பு முதலான பல்வேறு பிரச்னைகள் நமக்கு அன்றாடம் ஏற்படுகின்றன. அவை ஏற்பட்டவுடன் மருந்துகளையும், மாத்திரைகளையும் தேடி ஓடுபவர்கள் பலர் இருக்கின்றனர். இதற்கான வலி நிவாரணிகள் கிடைக்காத போது, வீட்டில் கிடைக்கும் பல்வேறு பொருள்களை வைத்து வலியை சரி செய்ய முடியும். பல்வேறு இயற்கையான வலி நிவாரணிகள் வலிகளை சரிசெய்கின்றன. நம் சமையலறைகளில் கிடைக்கும் பல்வேறு பொருள்கள் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவை.. வலி நிவாரணிகளாக நம் சமையலறைகளில் கிடைக்கும் பொருள்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்...
1. இஞ்சி
ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் அம்சங்கள் கொண்ட இஞ்சியை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். அதிலுள்ள வேதிப் பொருள்கள் காரணமாக, ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருள்களைத் தடுக்கும் இஞ்சி, எலும்பு மூட்டுகளிலும், தசைகளிலும் ஏற்படும் வலியைக் குணப்படுத்துகிறது.
2. மஞ்சள்
வீக்கத்தையும், புற்றுநோயையும் எதிர்க்கும் அம்சங்கள் கொண்டது மஞ்சள். இதனை எடுத்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப் பொருள் காரணமாக உடலில் வீக்கம் ஏற்படுத்தும் சுரப்பிகளின் அளவு குறையும்.
3. கிராம்பு
தலைசுற்றல் பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது கிராம்பு எண்ணெய். மேலும், இது பல் வலியை எளிதில் சரி செய்கிறது. பல் வலியின் போது, கிராம்பை மெல்வதோ, வாயில் வைத்துக் கொள்வதோ அதனைச் சரிசெய்கிறது. மேலும், கிராம்பு எண்ணெயில் கிடைக்கும் யூஜினால் என்ற வேதிப் பொருள் காரணமாக இதய நோய்களும் சரிசெய்யப்படுகின்றன.
4. துளசி
பல்வேறு ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது துளசி. இதிலுள்ள பல்வேறு வேதிப் பொருள்கள் காரணமாக, வீக்கம் குறைகிறது; வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. கார்டிசோல், அட்ரீனலின் முதலான ஹார்மோன்களின் சுரப்பதையும் கட்டுப்படுத்துகிறது துளசி.
5. பிர்ச் இலைகள்
பிர்ச் இலைகளில் இருக்கும் மெதில் சேலிசைலேட் என்ற வேதிப் பொருள் காரணமாக, வலிப்பு குறைப்பு, வலி நிவாரணி, பூஞ்சை எதிர்ப்பு முதலான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், உடலுக்குத் தேவையான வேதிப் பொருள்களை சுரக்க வைப்பதால், இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்மிக்க வலி நிவாரணியாக இது கருதப்படுகிறது.
இயற்கையில் கிடைக்கும் இந்தப் பொருள்களின் மூலமாக எளிதில் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்