மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில் கூடத்தான் அழகு என்றொரு பாடல் வரி உண்டு. மழையோ, வெயிலோ அதனை ரசனைக்குரியதாக ஆக்குவது நம் கைகளில் தான் உள்ளது. இந்தியாவில் கோடை இப்போது உச்சத்தில் உள்ளது. கோடையின் குதூகலங்களில் நுங்கு, இளநீர் வரிசையில் மாம்பழத்தையும் சேர்க்க வேண்டும். மாம்பழம், பலாப்பழமும் கோடை கால பழங்கள் தான். சீசன் ஃப்ரூட்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.
மிகப்பெரிய டயட்டீசியன்களின் முதன்மையான முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, நாம் வசிக்கும் பகுதியில் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய்கறி, பழங்களை தவறவிடக் கூடாது என்பது தான். ஏனெனில் இயற்கை அதில் ஒரு அக்கறையை மறைத்து வைத்துள்ளது. கோடையில் மாம்பழமும், பலாப்பழமும், ஆரஞ்சும், எலுமிச்சையும் தரும் சத்துகள் மனித உடலுக்கு அவசியமானவை. அதனால் அவற்றை தவிர்க்க உட்கொள்வோம்.
சரி எத்தனை நாள் தான் மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது சுவாரஸ்யமாக ஏதேனும் ரெசிபி சொல்லுங்களேன் என்று கேட்பவர்களும் உண்டு.
அவ்வாறு கேட்பவர்களுக்காக.. 4 ரெசிபிக்கள்:
1. மேங்கோ பன்னா
இது கோடை காலத்திலேயே வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பானம். புளிப்பும், இனிப்பும் சேர்ந்து சப்பு கொட்ட வைக்கும் இந்த பானத்தின் செய்முறை காண்போமா? சில மாங்காய்களை குக்கரில் வைத்து வேக வைக்கவும். பின்னர் அதை ஆறவைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெல்லம் சேர்க்கவும், ருசிக்கு சிட்டிகை ராக் சால்ட் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இவற்றை மிக்ஸரில் நன்றாக கூழாக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் வ்றுத்த சீரகத்தூள் சேர்ந்து கொஞ்சம் புதினா சேர்த்து பறிமாறவும். இது ஹீட்ஸ்ட்ரோக் ஏற்படாமல் இருக்க நல்லதொரு எனர்ஜி பானம் என்றால் மிகையல்ல.
2. மேங்கோ ஷேக்
நல்ல புளிப்பாக உள்ள மாம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் குளிர்விக்கப்பட்ட காய்ச்சிய பாலை ஊற்றுங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் வெனிலா ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் இனிப்பு வேண்டும் என நினைப்பவர்கள் கொஞ்சம் சர்பத் சேர்த்துக் கொள்ளலாம். அதை ஒரு மிக்ஸரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். நல்ல நீலமான கண்ணாடி டம்ப்ளரில் ஊற்றி, மேலே சில மாம்பழ துண்டுகளைப் போட்டு அருந்தினால் ஆஹா என்று சற்று நேரம் சொர்க்கம் சென்று வருவீர்கள்.
3. மேங்கோ சால்சா
மேங்கோ சால்சா கேட்கவே சால்சா நடனம் போல் குளுகுளுவென இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது ஆட்டமல்ல கோடைகால பானம். இந்த பானத்தை ஒரே நிமிடத்தில் செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். நாங்கள் அந்த ரெசிபியை சொல்கிறோம். தோலுரித்த மாம்பழங்களை சிறு துண்டுகளாக வெட்டுங்கள். அதில் கொஞ்சம் வெங்காயம், பார்ஸ்லி, பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு, சில துளி எலுமிச்சை சாறு பிழிந்துவிடுங்கள். அதை நன்றாக குலுக்கி எடுங்கள். பின்னர் அதனை நாச்சோஸ், சிப்ஸ் கூட சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். இதுதாங்க மேங்கோ சால்சா.
4. மேங்கோ லஸ்ஸி
நம்ம லஸ்ஸி எல்லாம் தயிரில் சர்க்கரை அவ்வளவு தான். ஆனால் பஞ்சாபிகளிடம் கேளுங்கள் லஸ்ஸிக்கு ஆயிரம் வெரைட்டி சொல்வார்கள். இப்போது நீங்கள் பார்க்கவுள்ளது மேங்கோ லஸ்ஸி. இதை செய்ய அல்ஃபோன்ஸா ரக மாம்பழம் தான் பெஸ்ட் சாய்ஸ். அதனால் சமரசமின்றி அதை வாங்கிக் கொள்ளுங்கள். தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிய மாம்பழத்தில் ஒரு கோப்பை தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் கெட்டியாக இருக்க வேண்டும். அத்துடன் கொஞ்சம் வெனிலா ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் சேருங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேருங்கள். மிக்ஸியில் நன்றாக ஃப்ளெண்ட் செய்து கோப்பையில் ஊற்றி அருந்துங்கள். சர்க்கரைக்குப் பதில் நீங்கள் வெல்லமோ அல்லது கொஞ்சம் ஃப்ரூட்டி, ஸ்லைஸ் பானங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்புறம் பானத்தை மெருகூட்ட அதன் மேலே பாதாம், பிஸ்தா பருப்புகளை வெட்டித் தூவலாம். இவையெல்லாம் ஆப்ஷனல் தான்.