ஆசிரியர் என்பது எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வு தான். பள்ளி ஆசிரியரை அவ்வப்போது சென்று சந்திக்கும் முன்னாள் மாணவர்கள். கல்லூரி பேராசிரியரை ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்தித்து ஆசி பெறும் முன்னாள் மாணவர் என்று அவ்வப்போது பசுமை மாறாத செய்திகளை நாம் வாசிப்பதுண்டு. ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வை நெருங்குபவர்கள் சிலர் அந்தக் காலத்தில் இருந்தமாதிரி இப்போது ஆசிரியர் மாணவர்கள் பிணைப்பு இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் கதைகளும் நாம் கேட்பதுண்டு.
இந்த ஜானர் எல்லாம் இல்லாமல் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அதுவும் விமானத்தில் நடந்துள்ளது. பயணங்களின் போது நம் உறவினர்களை, பால்ய நண்பர்களை எதேச்சையாக பார்க்கும் சம்பவங்கள் நிறைய உண்டு. இந்நிலையில் கனடாவில் ஒரு விமானத்தில் நடந்த சம்பவம் இணையவாசிகள் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது.
விமானத்தில் ஆசிரியரை சந்தித்த பணிப்பெண்:
அந்த விமானத்தின் பணிப்பெண்ணாக பணி புரிபவர் லாரா என்ற லோரி. அவர் விமானம் புறப்பட்டு பறந்த சில நிமிடங்களில் அனவுன்ஸ்மென்ட் செய்யும் இடத்திற்குச் செல்கிறார். அவர் அங்கு சென்றவுடன் மைக்கை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். லோரி என்ற அந்தப் பெண் பேசுகையில், நான் இன்று உங்களுடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.இன்று அக்டோபர் 5, தேசிய ஆசிரியர்கள் தினம். இந்த நாளில் நாம் நமது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் கடந்துவந்த ஆசிரியர்கள். நமக்குப் பிடித்தமான ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று இந்த விமானத்தில் எனது மனதிற்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் மிஸ் ஓ கொனெல் பயணம் செய்கிறார். அவரை நான் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று தான் நேரில் பார்க்கிறேன். இப்போது நான் கொஞ்சம் எமோஷனலாகப் போகிறேன். 1990களில் பள்ளியில் படிக்கும்போது மிஸ் ஓ கொனெலால் தான் நான் ஷேக்ஸ்பியரின் நாவல்களைப் படித்தேன். அவர் தந்த ஊக்கத்தால் தான் பியானோ இசைக்க கற்றுக் கொண்டேன். நான் பியானோ வாசிப்பதில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றிருக்கிறேன். நன்றி மிஸ் ஓ கொனெல் என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் நோக்கி ஓடுகிறார். தாய் மடி தேடி ஓடும் கன்றினைப் போல் அவர் ஓடுகிறார். அப்போது அந்த விமானமே நெகிழ்ச்சியில் கைதட்டுகிறது. சில நிமிடங்கள் விமானத்தில் இருந்தவர்களின் மனங்களும் வெளியே இருந்த காற்றைப் போல் லேசாகியிருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இன்னும் சிலர் தங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவரை இப்போது நினைத்துப் பார்ப்பதாகப் பகிர்ந்துள்ளனர்.