தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச மகிழ்ச்சி அறிக்கையில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் நெட்வொர்க் அமைப்பால் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் அறிக்கை, சர்வதேச மகிழ்ச்சி தினத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே, இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 150 நாடுகளில் வாழும் மக்களில் நல்வாழ்வு, உற்பத்தி விகிதம், ஆயுள் எதிர்பார்ப்பு முதலானவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்படுகிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்படும் தரவுகளின் அடிப்படையில், 0 முதல் 10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு, டாப் 10 இடங்களைப் பிடித்த நாடுகளுள் இந்த ஆண்டில் ஆஸ்திரியாவைத் தவிர பிற 9 நாடுகளில் இந்த ஆண்டின் டாப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மகிழ்ச்சி குறைவான நாடுகளின் பட்டியலில், ஆப்கானிஸ்தான் நாடு முதலிடத்திலும், லெபனான், ஜிம்பாப்வே, ருவாண்டா, போட்ஸ்வானா முதலான நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 139வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா இந்த ஆண்டின் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி, 136வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் டாப் 20 மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை இங்கே குறிப்பிட்டுள்ளோம்..
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. ஐஸ்லாந்து
4. சுவிட்சர்லாந்து
5. தி நெதர்லாண்ட்ஸ்
6. லக்ஸம்பெர்க்
7. ஸ்வீடன்
8. நார்வே
9. இஸ்ரேல்
10. நியூசிலாந்து
11. ஆஸ்திரியா
12. ஆஸ்திரேலியா
13. அயர்லாந்து
14. ஜெர்மனி
15. கனடா
16. அமெரிக்கா
17. யு. கே
18. செக் குடியரசு
19. பெல்ஜியம்
20. பிரான்ஸ்
சமீபத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் பட்டியலில் ரஷ்யா 80 வது இடத்திலும், உக்ரைன் 98-வது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மேற்கொள்வதற்கு முன்பே இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.