தெய்வங்கள்
எல்லாம் தோற்றே
போகும் தந்தை அன்பின்
முன்னே தாலாட்டு பாடும்
தாயின் அன்பும் தந்தை
அன்பின் பின்னே


தகப்பனின்
கண்ணீரைக் கண்டோர்
இல்லை தந்தை சொல்
மிக்க மந்திரம் இல்லை


என்னுயிர் அணுவில்
வரும் உன்உயிர் அல்லவா
மண்ணில் வந்த நான் உன்
நகல் அல்லவா காயங்கள்
கண்ட பின்பே உன்னைக்
கண்டேன்...


இந்தப் பாடல் வரிகளைக் கேட்டு உருகாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? சமகாலத்தில் தந்தையின் அன்பைப் போற்ற சிறந்த பாடல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று பலரின் ரிங்டோனாக ஒலிக்கும் பாடல். வரும் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் தேதியன்று கொண்டாடப்படவிருக்கிறது தந்தையர் தினம். அன்றைய தினம் இந்தப் பாடல் மீண்டும் உயிர் பெற்று பலராலும் பகிரப்படும்.


தந்தையர் தின வரலாறு:


இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும். காரணம் ஜூன் 3வது ஞாயிறு என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் தேதி மாறுபடும். பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளிலேயே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தன்று நம்மை பெற்றெடுத்த பயாலஜிக்கல் ஃபாதர் மட்டுமல்ல நாம் யாரையெல்லாம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறோமோ அவர்களையும் அரவணைத்துக் கொண்டாடலாம். 




 


தந்தையர் தினம் பரவலாக ஜூன் 3ஆம் ஞாயிறில் கொண்டாடப்பட்டாலும், ஸ்பெயின், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தைவானில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும், தாய்லாந்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் முன்னாள் அரசர் புமிபோல் அடுலியாதேஜ் பிறந்த நாளை முன்னிட்டு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.


தந்தையர் தினம் உருவானதற்கான புகழ் அனைத்தும் சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்ணுக்கே சேரும். அந்தப் பெண் அவரது தந்தைக்காக அந்த நாளை கொண்டாடினார். அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் இறந்த பின்னர் தனி நபராக இருந்து தனது தந்தை 6 பிள்ளைகளை வளர்த்ததற்காக அவர் அந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஒரு நாள் அன்னையர் தின நாளில் அவர் கேட்ட பிரசங்கம் ஒன்று தான் தந்தையர் தினத்தை அவரைக் கொண்டாட வைத்தது.


என்ன பரிசு கொடுக்கலாம்?


தந்தையர் தினத்தில் என்ன பரிசு கொடுக்கலாம் என்று இப்போதே நீங்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கலாம். எல்லா குழந்தைகளுக்கும் அப்பா தான் முதல் ஹீரோ. அவர்களின் ஸ்டைலும் அப்பாவிடம் இருந்து தான் ஆரம்பிக்கும். ஆகையால் அப்பாவின் தோற்றத்தை மிடுக்காக வைத்திருக்கும் உபகரணங்கள் தான் தந்தையர் தின பெஸ்ட் கிஃப்டாக இருக்க முடியும். அதில் முதலிடம் எப்போதும் ட்ரெண்டி ஃபுட்வேர் தான். அதாவது அப்பாக்களின் விருப்பத்திற்கே செருப்போ, ஷூவோ வாங்கிக் கொடுக்கலாம். சும்மா கச்சிதமா பொருந்தும்படி ஒரு ஜோடி வாங்கிக் கொடுத்துப் பாருங்களேன். ஒருவேளை அப்பா அவர் காலத்து அதரபழசு ஸ்டைலியேயே தேங்கியிருந்தால் அவரை ட்ரெண்டுக்கு கூட்டிட்டுவாங்க. அப்பாவுக்கு வயசு குறைந்தது மாதிரி ஃபீல் பண்ணுவார் தானே!. அதேபோல் பெல்ட், வாட்ச், மனிப்பர்ஸ் வகையறாக்களையும் கிஃப்ட் செய்யலாம். ஏன் அப்பாவின் ஓல்ட் லுக் ட்ரெஸ்ஸிங்கை மாற்றும் வகையில் அவருக்கு புதிய நவீன ஆடைகளை வாங்கலாம். கண்ணாடி ஸ்டைலை மாற்றிக் கொடுக்கலாம். ஸ்கின் கேர் பொருட்கள் வாங்கித் தரலாம். 


இப்படி எதுவுமே வாங்கித் தர இயலாவிட்டால் அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் கொடுத்தால் போதும்.