திருச்சி மாவட்டம் உறையூர் பகுதி காவல்காரன் தெருவில் சுமார் 16 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, தினந்தோறும் தினக்கூலி சென்று அன்றாட பொழப்பை நடத்தி வருகிறோம். குறிப்பாக அம்மிக்கல், உரல் போன்ற பொருட்களை சேதம் அடைந்து இருந்தால் அவற்றை சரி செய்யும் பணி தான் எங்களுடைய குலத்தொழில் ஆகும். காலம் மாற்றம் ஏற்ப அத்தகைய பொருளை பயன்படுத்துவது மிக மிக அரிதாக மாறியுள்ளது. இருந்தபோதிலும் தெருத்தெருவாக சென்று உணவின்றி தூக்கமின்றி எங்கள் தொழிலை செய்து வருகிறோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். எங்களுடைய தாத்தா காலத்திலிருந்தே மின்சாரம் இல்லாமலும் கழிவறைகள் இல்லாமலும் அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் எங்களுடைய பிழைப்பை காலம் போன போக்கில் ஓட்டி வருகிறோம்.

இந்நிலையில் எங்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்து உதவ வேண்டும் என்ற ஒரு எண்ணம் திருச்சியின் முதல் ஆட்சியரான  பொறுப்பேற்ற மலையப்பன் அவர்கள்தான் எங்களுக்கு தெய்வமாக நின்று இந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்தார். பின்பு வீடு கட்டுவதற்கும் எங்களிடம் பண வசதி இல்லாததை அறிந்து கொண்ட சில தனியார் தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். அதை தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக இந்த பகுதியில்தான் வசித்து வருகிறோம்.  ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு போன்ற அனைத்து  ஆவணங்களையும்  எங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.





மேலும் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும்  மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை. மூன்று தலைமுறைகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள எந்த அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. நாங்கள் அரசின் சலுகைகள் அனைத்தும் எங்களுக்குத் தர வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கவில்லை. நாங்கள் குடியிருக்கும் வீடுகளில்  மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கையாக உள்ளது என்றனர்.


தொடர்ந்து பேசிய மக்கள் தினக்கூலிகளாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தெருத்தெருவாக அலைந்து கூலிவேலை செய்து எங்களுடைய பிள்ளைகளை வளர்த்து வருகிறோம்.
நாங்கள் எங்களது முன்னோர்கள் என யாரும் படிப்பறிவு இல்லாமல் குலத் தொழிலை மட்டுமே செய்து வருகிறோம்.  எங்களது பிள்ளைகளாவது படித்து இந்த சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறோம். ஆனால் எங்களது பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளான கழிவறையும், மின்சாரமும் இல்லை.  எங்கள் பிள்ளைகள், அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் இந்தப் பகுதிகளில் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் மிகவும் சிரமப்பட்டு, அவதிப்பட்டு தான் செல்கிறார்கள்.  குறிப்பாக எங்களை ஏன் என்று கேட்க ஒரு நாதியும் இல்லை. எங்களுக்கு ஆதரவு அளிக்கவும் எவரும் இல்லை. ஒரு அனாதை போன்று இங்கு வாழ்ந்து வருகிறோம்.





மேலும், இதுகுறித்து அப்பகுதியில் இருக்கும் சிறுமியிடம் கேட்டபோது, எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மின்சார விளக்கில் நாங்கள் படித்ததும் இல்லை, மின்விசிறியில் தூங்கியதும் இல்லை. தினந்தோறும் பள்ளிக்கு செல்லும்போது வீட்டுப்பாடங்களை செய்ய முடியாத சூழ்நிலையும் ஆசிரியர்கள் எங்களை திட்டுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. எங்களுடைய கஷ்டத்தை பார்த்து வாரம் வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எங்களது பெற்றோர்கள் மனு கொடுத்து தான் வருகிறார்கள். இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு மின்சாரம் வழங்க இந்த அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் சிறுமி. இந்த சமுதாயத்தில் நாங்களும் ஒரு அங்கீகாரம் பெற வேண்டும். எங்களது பெற்றோர்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அரும்பாடுபட்டு படித்து வருகிறோம். படிப்பதற்கு கூட மின்சாரம் இல்லாமல் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருவது மிகவும் வேதனை கூறியதாக உள்ளது என்றார்.




குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதிகளில் சாக்கடை நீரும்,  கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் வருகிறது. வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலங்களில் வீட்டில் உறங்குவதே மிகக் கடினமாக இருக்கும். ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு மழை நிற்கும் வரை காத்திருப்போம் என சிறுமி தெரிவித்தார். குறிப்பாக இந்தப் பகுதியில் 16 குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறது. அருகில் உள்ளவர்கள் கூட எங்களுக்கு உதவி செய்ய யோசனை செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு காரணம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலேயே. இந்த உலகில் நாங்கள் பிறந்தது தவறா, இல்லை எங்களது பிள்ளைகளை இந்த சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமென்று கூலி வேலை செய்து சுயமரியாதையுடன் வாழ்வது தவறா என்று எங்களுக்கு தெரியவில்லை என்றனர். இந்த  அரசாங்கம் எங்களுடைய வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் காலங்களைக் கடந்து வருகிறோம் என்றனர் கண்ணீருடன்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண