Tamil Nadu 10th Result 2022: நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ள நிலையில், புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன.


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதினர். இதே போல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேநேரம் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.


இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 


விடைத்தாள்களைத் திருத்துவதில் கடுமை வேண்டாம்


10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தேர்ச்சி விகிதம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தேர்வு தேதிகளில் மாற்றம்


10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதன்படி, ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன. 


இதையும் வாசிக்கலாம்: TN 10th Result 2022: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?- முழு விவரம்


TN 12th Result 2022: புதிய தேதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: தெரிந்துகொள்வது எப்படி?- முழு விவரம்..