நம் நலவாழ்வு என்பது உடல்நலனை மட்டும் சார்ந்தது இல்லை. அது மன ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதே. காலநிலை மாற்றத்தினால் பூமியின் தட்பவெட்பநிலை தொடர்ந்து மாறி வருகிறது. புயல், வெள்ளம் போன்றவைகள் அடிக்கடி ஏற்படுவது மற்றும் பருவநிலைகளில் மாற்றம் உள்ளிட்ட விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம். இயற்கை சூழலைக் கொண்டே நம் வாழ்வு முறை இருக்கும்பட்சத்தில், திடீரென மாறுபடும் பருவநிலை மாற்றஙகளால் நம் வாழ்க்கைச் சூழலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.


காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்னைகள் எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நம்மால் கணிக்கக் கூட முடியாதென்பதே நிதர்சனம். கடல்மட்டம் உயர்தல், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு திடீர் நிகழ்வுகள் இல்லை. இதெல்லாம் நீண்டகாலப் பிரச்சனைகள். இதனால் மனிதர்களின் மன நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.




அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட  சமீபத்திய ஆய்வில் அதீத வெப்பநிலை மனிதர்களிடையே மனச்சிதைவையும், மனச்சிக்கல்களையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எதிர்பாராத பருவநிகழ்வுகளால் சகிப்புத்தன்மை குறைந்து வன்முறை அதிகரிக்கிறது. அத்துமீறல், விபத்து திடீர் இறப்பு உள்ளிட்டவைகள் அதிகரிக்கின்றன.


அதீத வெப்பநிலை மனித மனநலனைப் பாதிக்கிறது. அதிக வெப்பச் சூழல் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அதிகமானோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக வெப்பமான இடங்களில் தற்கொலை விகிதம் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. வெப்பம் மிகுந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஏற்கனவே மனச்சிதைவிற்கு (Schizophrenia) உள்ளானவர்கள் இன்னும் மோசமான நிலையை அடைகிறார்கள். விரும்பத்தகாத நிகழ்வுகளின் நினைவுகளில் சிக்கி அவர்களுக்கு Post Traumatic Stress Disorder ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சுற்றுச்சூழலின் அதிக வெப்பநிலை காரணமாக மனிதர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக அதீத வெப்பச் சூழலில் வாழ்பவர்களுக்கு அதீத பதற்றம், மனத்தொய்வு, நம்பிக்கையின்மை போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க உலக நாடுகள் செயல்பட தொடங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தைப் பற்றி பேசும் அளவிற்கு அதற்காக தீர்வுக்கான திட்டங்களையும் செயல்படுத்துவதுதான் தற்போதைக்கான அவசியம்.




வறண்ட பூமியில் வசிப்பவர்கள் மேலும் வறட்சியை எதிர்கொள்ளும்போதோ, கடலோர மக்கள் கடல்மட்டம் உயர்வதால் பாதிப்புகளை சந்திக்கும்போதோ அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. பனிசூழ் இடங்களில் வசிக்கிற மக்கள் பனிப்பாறைகள் உருகும்போது பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். தற்போது வெப்பம் அதிகரிக்கும் பகுதிகளிலும் மக்கள் மனநலன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.  இவர்கள் பொதுவாக மனத்தொய்வு (Psychosocial malaise) போன்ற பல மனநல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


இதற்குத் தீர்வாக பாகஸ்டம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்னவென்றால், உலக நாடுகள் காலநிலை மாற்றத்தால் மனதளவில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான மனநலன் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.