இது தேர்வு காலம். பிளஸ் 2 தேர்வு அதைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு பின்னர் மற்ற வகுப்புகளுக்கான தேர்வு அப்படியே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு என அட்டவணை வரிசை கட்டி நிற்கிறது.
வகுப்பு சிறியதோ பெரியதோ அதற்கேற்ப மாணவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சில பெற்றோரும் காரணம். 1ஆம் வகுப்பு படிக்கும் போது நீ இதைத்தான் இப்படித்தான் இங்கேதான் படிக்க வேண்டுமென்றெல்லாம் திணிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
இந்நிலையில் சில டிப்ஸை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம் அதன் மூலம் தேர்வினால் ஏற்படும் அழுத்தம் பதற்றத்தை எளிதில் கடக்கலாம்.
1. சீரான தூக்கம் வேண்டும்
தேர்வு வந்துவிட்டால் மட்டும் இரவு அதிகம் நேரம் விழித்து காலையில் சீக்கிரமாக எழ வேண்டுமென்றில்லை. அவ்வாறாக தூக்க நேரத்தைக் குறைப்பது உங்களது ஆற்றலைக் குறைக்கும். உங்கள் மூளை பாடங்களை உள்வாங்கும் திறன் குறையும். தி நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட கட்டுரையில் தூக்கமின்மை அழுத்தத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தேர்வு நேரத்தில் நிச்சயமாக போதிய அளவு உறங்க வேண்டும்.
2. வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
தேர்வு நேரத்தில் வைட்டமின் சி நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். அது ரத்த அழுத்தத்தை குறைக்கும் கார்டிசோல் கொண்டுள்ளது. கொய்யா, கிவி, குடை மிளகாய், கிவி, ப்ரோக்கோலி ஆகியனவற்றில் அதிகமாக வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சுகளிலும் வைட்டமின் சி உள்ளது.
3. சமச்சீரான உணவு உட்கொள்ளுங்கள்
சீரான உணவு உங்கள் உடல் சரியாக செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், உடல் நோய், தொற்று, சோர்வு மற்றும் குறைந்த செயல்திறன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்பு என நான்கு கூட்டணிகளின் கலவையே சமச்சீரான உணவு. கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவை உடலுக்கு ஆற்றலைத் தருகின்றன. ஆனால், நார்ச்சத்தானது செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இந்த நான்கிலும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.
4. உடற்பயிற்சி அவசியம்:
உடலும் உள்ளமும் சீராக இருக்க உடற்பயிற்சி அவசியம். ஓட்டம், நடைப்பயிற்சி, ஜாக்கிங், யோகா, ஏரோபிக்ஸ் என ஏதேனும் ஒருவகை உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
5. 10 நிமிடம் நடந்து பாருங்கள்:
நீண்ட நேரம் படித்தபின்னர் உடலில் மனதில் ஒருவித சோர்வு ஏற்படும். அந்த நேரங்களில் 10 அல்லது 20 நிமிடங்கள் சின்னதாக ஒரு நடைப்பயிற்சி சென்று வந்தால் நலம் தரும்.
6. படித்தலை சுவாரஸ்யமாக்குங்கள்
படிப்பதை கொஞ்சம் சுவாரஸ்யமாக்குங்கள். புத்தகத்தை அப்படியே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்காமல் நோட்ஸ் எடுத்துப் படியுங்கள். ஃப்ளாஷ் கார்ட்ஸ், படங்கள், விசுவல்ஸ் என ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். சில நேரங்களில் உங்கள் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கூட நீங்கள் ரிவைஸ் செய்து கொள்ளலாம்.