பெண்களுக்கு அந்த மூன்று நாள் அவஸ்தை மெனோபாஸ் வரை நீடிக்கும். ஒரு பெண் சராசரியாக 13 வயதில் பூப்பெய்கிறாள் என வைத்துக் கொண்டாலும் 45 வயது வரை அவள் மாதவிடாய் நாட்களைக் கடக்க வேண்டும்.


முந்தைய காலத்தில் துணி பயன்படுத்தி அதையும் அலசி அலசி பயன்படுத்தி பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இப்போது துணிக்குப் பதில் விதவிதமான சானிட்டரி நாப்கின்கள் வந்துவிட்டன. ஆனால் நாகரிகத்துடன் நச்சும் இருக்கிறது என அச்சுறுத்தலும் வருகிறது. சானிட்டரி பேட்களில் உள்ள கெமிக்கலால் கர்பப்பைக்கு ஆபத்து எனக் கூறுகின்றனர். 
மீண்டும் துணிக்கு மாற முடியாது. அது சுகாதார சீர்கேடு. காட்டன் பேட்கள் அதிக உதிரப்போக்கு நாட்களில் உதவுவதில்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது என குழம்பும் பெண்களுக்கான மாற்று யோசனை தான் இந்த மென்ஸ்ட்ரூவல் கப் (மாதவிடாய் கோப்பை).


மருத்துவம் சார்ந்த எந்த ஒரு உபகரணமாக இருந்தாலும் அதனை மருத்துவரிடம் ஆலோசித்தே பயன்படுத்த வேண்டும். அதனால் பெண்கள் தங்களின் மகப்பேறு மருத்துவரைப் பார்த்து ஆலோசிக்க வேண்டும். அவர் நமது பெல்விக் ஃப்ளோர் தசையின் வலுவை அறிந்து பரிந்துரைப்பார். ஒருவேளை சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு சிறிய கோப்பைகளையும், 30 வயதுக்கு மேற்பட்ட நார்மல் டெலிவரி கண்ட அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கு பெரிய கோப்பைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


ஏற்கெனவே டாம்பூன் பயன்படுத்தியவர்களுக்கு இது எளிதாக இருக்கும். புதிதாக பயன்படுத்துபவர்கள் ஓரிரு முறையில் கற்றுக் கொள்ளலாம்.சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு மென்ஸ்ட்ரூவல் கோப்பை பொருந்தவே பொருந்தாது.  அதை மருத்துவரிடம் முதலிலேயே சொல்லிவிடவும்.




எப்படி பயன்படுத்துவது? மென்ஸ்ட்ரூவல் கோப்பையை முதலில் பயன்படுத்தும் போது அதன் வளைவில் தண்ணீர் அல்லது லூப்ரிகன்ட் (தண்ணீர் சார்ந்த) தேய்த்துக் கொள்ளவும். இப்படிச் செய்வதால் எளிதாக பிறப்புறுக்குள் அதனை செலுத்த முடியும். பின்னர் அதை c வடிவில் மடித்துக் கொள்ளவும். குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு கோப்பையை உள்ளே செலுத்தவும். கோப்பையின் கீழ் உள்ள தண்டு மட்டுமே வெளியில் இருக்க வேண்டும். கோப்பையை உள்ளே சரியாக செலுத்தினால் உள்ளே சென்றதும் அது விரிந்து வட்ட வடிவில் அமர்ந்து கொள்ளும். அதில் மாதவிடாய் ரத்தம் சரியாக சேரும். ஓரிரு முறை இதில் தவறு நேரலாம். ஆகையால் முதன்முறை பயன்படுத்தும்போது நேப்கினும் பயன்படுத்திக் கொள்ளவும். ஒருவேளை உங்கள் நேப்கினில் ரத்தம் பட்டிருந்தால் நீங்கள் கோப்பையை சரியாகப் பொருத்தவில்லை என்று அர்த்தம். நிறைய யூடியூப் காணொளிகளில் மகளிர் நல மருத்துவர்களே பொம்மைகளைப் பயன்படுத்தி மென்ஸ்ட்ரூவல் கோப்பை பயன்பாட்டு முறையை விளக்கியுள்ளனர். அதையும் பார்த்து பயனடையலாம்.


மென்ஸ்ட்ரூவல் கோப்பையை 6 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இல்லை சிறிநீர் கழிக்கச் செல்லும் போது அதை வெளியில் எடுத்து க்ளீன் செய்துவிட்டு மீண்டும் இன்சர்ட் செய்து கொள்ளலாம்.


இந்த கோப்பையை ஒவ்வொரு நாளும் சுடு தண்ணீரில் கழுவி, மென்ஸ்ட்ரூவல் கப் க்ளீனர் கொண்டு சுத்தப்படுத்தலாம். கடினமான சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தால் மீண்டும் நீங்கள் கோப்பையை உள்ளே செலுத்தும்போது அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம்.
 
மென்ஸ்ட்ரூவல் கோப்பைகள் செலவு ரீதியாக கையடக்கமானது. அதுபோல் ஒரு மென்ஸ்ட்ரூவல் கோப்பையை மூன்றாண்டுகள் வரை பயன்படுத்தலாம். இதனால் நேப்கின் செலவு குறைவும். இந்திய ரூபாய் மதிப்பில் குறைந்தபட்சம் ரூ.300ல் இருந்தே இந்தக் கோப்பை கிடைக்கிறது.


மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தினால் நலம் சேரும்.