வேட்டைத் துணைவன் - 2


“நாயேன், நாயடியேன், அடிநாயினன், ஊர் நாயின் கடையேன்”


தன்னைக் கீழானவனாகக் காட்டிக்கொள்ள மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் எடுத்தாளப்பட்ட சொற்கள் இவை. அன்றைய சுழலில்,  சமூக அடுக்குகளில் மேலானவர்களாகக் கருதப்பட்டவர்களின் மதிப்பீட்டில் நாய்களுக்கான இடம் அத்தகையதாகவே இருந்தது. ஒரு காலச்சூழலில் பயன்பாட்டு முக்கியத்துவம் பெறாத இனமானது ஒன்று சுமையாகும் அல்லது கவனத்திற்கு வராமல் போகும். உலகப் பொதுமறையான திருக்குறளில் நாய் பற்றி ஒரு சொல் கிடையாது. காரணம் அவர்கள் வாழ்வில் நாய்களைக் கண்டதுண்டேத் தவிர அதனோடு தொடர்பு கொண்டதில்லை. ஆனாலும் நாய்கள் எளிய பொருளியல் / சமூகப் பின்புலம் கொண்ட மனிதர்களிடம்  தன் பங்களிப்பை தொடர்ந்து  செலுத்திக்கொண்டே இருந்தது.


“காயும் வில்லினன், கல்திரள் தோளினன்


துடியன் நாயினன்”


 என்ற வரியை குகனைக் குறிக்க  கம்பர் கையாள்கிறார் . அழுது அடிசேர்ந்த அன்பரான மாணிக்கவாசகருக்கும், கல்திரள் தோளும்,  நாயும் உடைய குகனுக்கும் இடையே எவ்வளவு தூரமோ அதே தூரம் தான் சிவலிங்கத்தின்  முன்பு கண் கசிய வேண்டி நின்ற பக்தருக்கும், தன் கண்ணையே குடுத்த வேட்டுவர் கண்ணப்பருக்கும். ரெண்டு உலகத்திலும் ரெண்டு சித்திரங்கள் அன்றைய நாய்கள் பற்றிய குறிப்புகளை  நாம் இன்னொரு முனையில் இருந்தே தேடவேண்டியதுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள் நாய்களை ஞமலி, ஞாளி என்றும் கோவம் கொண்ட நாய்களை “கத நாய்” என்றும் பதிவு செய்கிறது.


“சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல்


உடும்பின் வறைகால் யாத்தது வயின் தொறும்


பெருகுவீர்”


என்ற பெரும்பாணாற்றுப்படை வரி வேட்டுவக்குடிகளான எயினர் இன மக்கள்,  நாய்களைக் கொண்டு வேட்டையாடிப் பெற்ற ஊண் உணவு குறித்துச் சொல்கிறது.




“கான் உறை வாழ்க்கை, கத நாய் வேட்டுவன்” என்ற புறப்பாடல் வரியோ கானகத்து வாழ் வேட்டுவனையும் அவனோடு இணைந்து வாழ்ந்த நாயையும் குறிக்கிறது. தோராயமாக சுமார் ரெண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட சங்க காலத்தமிழகத்தில் இலக்கிய உவமையாக காணக்கிடைக்கும் நாய்கள் தொடர்பான குறிப்புக்கள் பெரும்பாலும் தினையடிப்படையில் மலைவனப் பகுதியான குறிஞ்சி நிலத்தை சார்ந்தவையே!


வரலாற்று அடைப்படையிலுமே கூட, குன்றுகளில் வாழ்ந்த சிறுகுடிகளே தனக்கு கட்டுப்பட்டு இருந்த மிருகங்களுடன் சமவெளியை அடைந்திருக்கிறது. அங்குதான் மந்தை பெருகி,  மக்கள் பெருத்தனர். மந்தை ஆநிரைகளால் நிறைந்த போது அங்கே  செல்வம் தேக்கமானது. அந்தக் காலகட்டத்தில்தான் வேட்டை பங்காளன் தன் பகுதி நேரக் காவலை நீட்டிக்கும்படியானது. ஆம்  செல்வம் என்றான போது அது கவரப்பட வேண்டுமே. எதிரி நாட்டுக்கு சொந்தமான கால்நடைகளை கவர்ந்து வருவதற்க்கு “ஆநிரை கவர்தல்” என்று பெயர். அப்படி ஒரு சூழலில் கள்வர்களிடம் எதிர்த்து போரிட்டு மரணமடைந்தவர் ஒருவர்க்கு  எடுத்தனூர் என்ற ஊரில் நடுகல் ஒன்றுண்டு . நடுகல் வழிபாடென்பது தொல்காப்பியக் காலம் தொட்டு எளிய மனிதர்களின் நிலவும் வழிபாட்டு முறை. தமிழகத்தில் அனேக இடங்களில் நடுகல் உண்டுதான்,  ஆனாலும் இதில் கூடுதல் சிறப்பு உண்டு.


The book of indian dogs  என்ற புத்தகத்தை எழுதிய தமிழின் மூத்த சூழியலாளரான திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள், எடுத்தனூரில் உள்ள நடுகல்லை பதிவு செய்கிறார்.  அந்நடுகல் அவ்வீரனுக்கு மட்டுமே நிறுவப்பட்டதல்ல!  அவனோடு சேர்ந்து போரிட்டு உயிர் விட்ட அவன் நாயுக்கமானது. ஆம் நடுகல்லில் நாயும் உண்டு.  அதனருகே,


“கோவிசைய மயிந்திர பருமற்கு முப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப் புறந்தேவாடி பட்டான் கல்” என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளது. அதன் மூலம் கள்வர்களுடன் போரிட்ட நாயுடைய பெயர் கோவியனாக இருக்கக் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.


சரி இவ்வளவு தூரம் மதிக்கத் தக்க பங்களிப்பை செய்த நாய்கள் எல்லாமும் என்ன இனம்? இராஜபாளையமா? கன்னியா?  சிப்பிபாறையா?  என்றால் நிச்சம் இல்லை.  ஒப்பிடும் போது இவை அனைத்தும் indigenous breeds. வரலாற்றில் சமீபத்தியது. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புடைப்பு சிற்பத்தில் இடம் பெற்ற “கண்ணப்ப நாயனார்” கையில் இருந்த “நாய்கள்” துடங்கி, எடுத்தனூர் நடுகல்லில் இடம் பெற்ற “கோவியன்” வரையில் அத்தனையும் அதிகம் கலப்புகள் இல்லாத நாட்டு நாய்களே. இன்று வீதியில் காணும் நாய்கள் அல்ல அவை .நகர் புற வீதிகளில்  நாம் பார்ப்பதெல்லாம் பல தரப்பட்ட  நாயினங்களின் கலப்பினமான mongrels மட்டுமே.


அசல் நாட்டு நாய் என்பது, முன்பு கிராப்புறங்களில் பன்றிகள் பிடிக்க பயன்படுத்தப்படும்  நல்ல உடல் கட்டு உள்ள நாய்களே. மந்தை காத்தும். பட்டிகளுக்கு காவல் இருந்ததும் அதுவே. அதனாலேயே அவற்றுக்கு பட்டி நாய் என்ற பெயரும் உண்டு.


காத்தலே பின்பு கடவுளர்களின் காத்தருளுதளாக மாறியது. காத்தவன் முன்னோடி. காத்தவன் தலைவன். காத்தவனே கடவுள். அதுவும் போக காக்க ஒரு சாரார் உண்டென்ற போது தான் பொருள் ஆக்க பிறரால் முடியவும் செய்திருக்கிறது.  குடிகாத்தமையால் தெய்வமாக்கப்பட்டு ஊர் முகப்பிலும், காட்டுப்பாதையிலும், கண்மாய் கரையிலும் காவல் / குல தெய்வமாக வெற்றுடம்போடு இருக்கும் கருப்பனோடும் மாடனோடும் நிற்கும்  நாய்களே  இந்த நெடிய மரபின் நீட்சியும் சாட்சியும் .