வீட்டில் உள்ள பெரியவர்கள் சில அறிவுரைகள் வழங்கும் போது, நமக்கு எரிச்சலாக இருக்கும். சில நேரம், இவங்களுக்கு இது தான் வேலையா என நொந்து கொள்வோம். அதில் மிக முக்கியமான அறிவுரை, ‛ராத்தியில் நகம் வெட்டாதே... ராத்திரியில் ஏன் முடி வெட்டிட்டு வந்தே...’ என்பதை நாம் அதிகம் கேட்டிருப்போம். உண்மையில் இதன் பின்னால் சில முக்கிய காரணங்களும் இருந்திருக்கிறது. ஆனால், அதை நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம். அப்படி என்ன உண்மை? பார்க்கலாம்




முன்னோர் கூற்று!


நம் முன்னோர், சிலவற்றை அறிவியலை கடந்து சிந்தித்தார்கள். அதனால் தான் அவற்றை அறிவியலே சில சமயம் கண்டு வியந்தது. அவை நடைமுறையை ஒட்டிய உண்மையாக இருக்கும். அதற்கான காரணமும் நியாயமானதாக இருக்கும். ஆனால், அந்த காரணத்தை ஏற்பதில் தான் தலைமுறை இடைவெளி இருக்கிறது. நகம் வெட்டுவதிலும், முடி வெட்டுவதிலும் இருக்கும் காரணமும் அதை போன்றதே.


உணவுக்கு ஆபத்து!


இன்று போல, அன்று மின் வசதிகள் கிடையாது. அரிக்கேன் விளக்கு இருந்தால், அதற்கு ஊற்ற எண்ணெய் இருந்தால் அந்த குடும்பமே வசதியான குடும்பமாக இருக்கும். அந்த காலகட்டத்தில், இரவில் தான் பலரின் வாழ்க்கை இருந்தது. அவ்வாறு இரவில் வீட்டிற்கு முடிவெட்டி வரும் போதோ, அல்லது நகம் வெட்டும் போதோ, அது காற்றில் பறந்து வீட்டில் இருக்கும் உணவுகளில் கலக்க வாய்ப்பிருக்கும். பகலாக இருந்தால் அதை கண்டுவிடலாம். இரவில் அதற்கு வாய்ப்பே இருக்காது. நகத்துண்டுகளோ, முடியோ கலந்த உணவை உட்கொண்டால், வயிற்று உபாதைகளை சந்திக்க நேரிடும். அந்த காலத்தில் நினைத்த நேரத்தில் எல்லாம் மருத்துவம் பார்க்க முடியாது. பார்க்க நினைத்தாலும், பல கி.மீ., தூரம் பயணிக்க வேண்டும். பயணிக்க நினைத்தாலும் வாகனம் இருக்காது. நடந்து தான் செல்ல வேண்டும். நடந்து செல்ல வேண்டும் என்றால், இரவில் அதற்கும் பாதுகாப்பு இருக்காது. ஒரு சிறு நகத்துண்டு, ஒரு சிறு முடி இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் போது எப்படி அனுமதிப்பார்கள்? 




ஆன்மிக நம்பிக்கையும் உண்டு!


முடி, நகம் வெட்டுவதில் ஆன்மிக நம்பிக்கையும் இருந்தது. பொதுவாக விளக்கு வைத்த பின் வீட்டிலிருந்து எதையும் தானம் செய்யக்கூடாது என்கிற நம்பிக்கை சிலரிடத்தில் இருக்கும். நம் உடலில் இருக்கும் நகம், முடியும் வெட்டும் போது, அதுவும் ஒருவகையான தானமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டார் என்கிற ஐதீகம், சிலரால் நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கை காரணமாக, வெள்ளிக்கிழமைகளில் முடி, நகம் வெட்டுவதை சிலர் வீட்டில் அனுமதிப்பதில்லை. 


இது போன்ற காரணங்களின் பின்னணி தான், நகம் வெட்டவும், முடி வெட்டவும், இரவில் வீட்டில் பெரியவர்கள் தடை போட காரணம். நம் உணவில் முடி இருந்தால் நமக்கு எப்படி கோபம் வரும். அது கண்ணுக்கு தெரியும் அளவுக்கு இருக்கும் போது சரி, கண்ணுக்கு தெரியாத அளவிற்கு வரும் போது, அதை கவனிக்க நாம் தவறுவோம். எனவே தான், முடி வெட்டும் போதும், நகம் வெட்டும் போது, முடிந்த அளவிற்கு கிச்சன் பக்கம் செல்வதை தவிர்க்க வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண