இந்திய கிரிக்கெட் அணியின் (The Wall) என்று அனைவராலும் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். அணிக்கு இவர் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.



இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ராகுல் டிராவிட்-ஐ அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் எதிரணியினர் எறியும் பந்துகளை அசராமல் சுவர் போல நின்று தடுத்து விளையாடுவார். இதனால் “The Wall” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறந்த வீரர்களின் பந்து வீச்சு தாக்குதல்களுக்கும் எதிராக நின்று எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.


டிராவிட், 1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். பின்னர் அதே ஆண்டு அவர் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் ஆகும். மேலும் அத்துடன் 10,889 ரன்களை குவித்துள்ளார்.



டிராவிட் கடந்த 2012ஆம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


ஒரு வீரராக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒரு சிறந்த  பயிற்சியாளராக, ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணி மற்றும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதன் மூலம் பல இளம் வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ப்ரிதிவ் ஷா, சுப்மான் கில் என்று அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் இன்று இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்ததிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை, புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ அறிவித்தது. இப்போது டிராவிட்டின் பயிற்சியில் தென் ஆப்பிரிக்கவுடனான டெஸ்ட் பேட்டியில் இந்திய விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.