வாழ்க்கை முறையில் ஏற்படும் உணவு மாற்றம், பழக்கவழக்க மாற்றங்கள், சரியான ஓய்வு இல்லாமல் இருப்பது, போன்றவை நமக்கு சோர்வையும் மந்த நிலையும் ஏற்படுத்துகிறது.


உடலுக்கு ஓய்வின் அவசியத்தை உணர்த்துவதே இந்த சோர்வு மற்றும் மந்த நிலையாகும். போதுமான தூக்கமின்றி உழைத்துக் கொண்டிருப்பது, கடுமையான வேலைகளை ஓய்வின்றி தொடர்ந்து செய்வது, இந்த நிலைக்கு காரணமாகும். இதை தவிர்ப்பதற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்குவது அவசியம்.


சரியான ஓய்வு, ஆரோக்கியமான பழக்க வழக்கம், இதனால் கிடைக்கும் சிறப்பான வாழ்க்கை முறை மட்டுமே சோர்வு மற்றும் மந்த நிலை இல்லாமல் உற்சாகத்துடன் இருக்கச் செய்யும். ஆரோக்கியமான உணவு, மது புகையிலை பழக்கத்தை தவிர்ப்பது, சரியான முறையில் ஓய்வு மற்றும் சிறிய அளவில் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே இத்தகைய பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.


மேலும், உடலுக்கு தேவையான ஓய்வு மற்றும் உறக்க சுழற்சி மாறுபாடும் கூட, எப்போதும் காணப்படும் சோர்வு மற்றும் மந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது இரவில் கேளிக்கைகளில் நேரம் செலவிடுவது மற்றும் இரவில் திரைப்படங்கள் பார்ப்பது என உடலின் சுழற்சி மாறுபடுகிறது. மேலும், இத்தகைய நேரங்களில் உண்ணும் உணவானது, நமது உடலால் ஜீரணிக்க சிரமப்பட்டு நம்மை உற்சாகமின்மையோடு செயலற்றவர்களாக ஆக்குகிறது.


இவற்றை தவிர்ப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.


சரியான நேரத்தில் 8 மணிநேர தூக்கம்:


இரவு வேளையில் சுமார் 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஆழ்ந்த உறக்கத்திற்கான நேரமாகும்.ஆகையால் ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள்ளாக, படுக்கைக்கு சென்றால் மட்டுமே,ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியும். தூங்கும் நேரத்தில் இருந்து 8 மணி நேரங்கள், தொடர்ச்சியாக உறங்க வேண்டும். இது உங்கள் உள் உறுப்புகளை ஓய்வு பெற செய்து, நாளமில்லா சுரப்பிகள்,சரியானபடி சுரந்து,உடலின் கழிவுகளும்,மனதின் கழிவுகளும் வெளியேறுவதற்கு ஏதுவாக இருக்கும்.ஆகவே ஒரு நாளைக்கு 8 மணி நேரங்கள், முடிந்தவரை இரவில் தூங்குங்கள்


உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்:


சோர்வின் ஆரம்ப நிலைகளில் நீரிழப்பும் ஒன்றாகும். குறிப்பாக உடற்பயிற்சியின் போது நிறைய நீர் இழப்பு ஏற்படுகிறது.எலக்ட்ரோலைட்டுகள் குறைவதினால் தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.அத்தகைய நேரங்களில், உடற்பயிற்சி முடிந்து,தேவையான அளவு சுத்தமான குடிநீர், இளநீர் மற்றும் பதநீர் போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.இது நீர் இழப்பினால் வரும் சோர்வையையும்,மந்த நிலையையும் போக்குகிறது. 


உடல் எடையை குறையுங்கள்:


வயதுக்கு மீறிய உடல் எடையானது,  அதிகப்படியான சோர்வையும், மந்த நிலையையும் தருகிறது.ஆகவே உடல் எடையை குறைப்பது, சுறுசுறுப்பிற்கும்,உற்சாகத்திற்கும் வழி வகுக்கும்.


உடற்பயிற்சி செய்யுங்கள்:


உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலுக்கு தேவையான ஆக்சிஜன், உடலுக்கு கிடைக்கிறது.மேலும் ரத்த ஓட்டம் சீர்படுகிறது.கொழுப்பு கரைக்கப்படுகிறது.இதனால் உடற்பயிற்சி தொடர்ச்சியாக செய்யும் போது,உடலும் மனமும் ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கிறது.


அளவுக்கு அதிகமான காப்பி அல்லது டீ குடிப்பதை தவிர்த்திடுங்கள்:


காப்பியானது நமது உடலில் நிறைய ரசாயன மாற்றங்களை செய்வதால், உடலின் சுழற்சி பாதிக்கப்பட்டு, காபி குடிக்கும் தருணத்தில் மட்டும் சுறுசுறுப்பாகவும்,மற்றைய தருணத்தில் மந்தமான நிலையையும் தருகிறது. ஆகவே அளவுக்கு அதிகமான காப்பி அல்லது டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.


ஊட்டச்சத்து குறைபாடு:


ஊட்டச்சத்து குறைபாடினால் ரத்த சோகை வருவதைப் போன்று, எந்நேரமும் மந்தமாகவும்,செயல் அற்றும்,சுறுசுறுப்பு இல்லாத நிலையும் நீடிக்கும்.இதை தவிர்ப்பதற்கு,உணவு பட்டியலில் சமச்சீரான உணவுகள் இருக்கும் படி குறிப்பாக B12 பார்த்துக் கொள்ளுங்கள். இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து, உடல் முழுமைக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கிறது.எனவே ஆக்சிஜன் உங்கள் உடம்பில் நிறைய இருக்கும் தருணங்களில், சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.


மது மற்றும் புகைப் பழக்கத்தை கைவிடுங்கள்:


நாள்பட்ட மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும், மந்த நிலைக்கு இட்டுச்செல்லும்.ஆகவே உடனடியாக,புகை பிடிப்பது மற்றும் மது பொருந்துவதை நிறுத்துங்கள். இதனால் நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்பட முடியும்.


தியானம் பழகுங்கள்:


அதிக மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளின் விளைவுகளாலும், உடலானது சோர்வடையலாம். விட்டமின் குறைபாடு இல்லாமல், சரியான முறையில் தூக்கம் இருந்தும், சிறிய அளவில் உடற்பயிற்சி இருந்தும் கூட,சோர்வும் மந்த நிலையும் தொடர்ந்தால், முறையான ஆசிரியரிடம் தியானம் பழகுங்கள்.இது உங்களை உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும்.


ஏனைய உடல் பிரச்சினைகள் இருந்தால் சரி செய்யுங்கள்:


சோம்பலுக்கு காரணங்களாக சொல்லப்படும் இரத்த சோகை, காய்ச்சல், வைரஸ்,மோசமான ஊட்டச்சத்து, தூக்க கோளாறுகள், மூளை காயம், நீரிழப்பு, ஹைப்பர் தைராய்டிசம், மூளையின் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், பிட்யூட்டரி நோய்கள், மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் கூட சோர்வும் வந்த நிலையில் இருக்கும் ஆகவே இதற்கு சரியானபடி மருத்துவ ஆலோசனை பெற்று மறந்து உட்கொள்ளும் போது நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். இதுவே பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய், மன தளர்ச்சி, மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு, ஸ்டீராய்டு மருந்துகளும் சோம்பலை உண்டாக்கும். குழந்தைகளுக்கு சோம்பல் அதிகமாக இருந்தால் அதிக காய்ச்சல், நீரிழப்பின் அறிகுறிகள்,  தோலில் திடீர் தடிப்புகள் தோன்றுவது மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படக்கூடும்.


ஆகவே மேற்கொண்ட விஷயங்களில் கவனமாக கையாண்டு எப்போதும் காணப்படும் மந்தநிலையையும் சோம்பலையும் விரட்டி அடித்து சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்