வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேர்காடு பகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் 12 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சேர்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட மற்றும் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் 14 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.


காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், திருவள்ளுவர் அரசு பல்கலை கழகத்தின் துணை சேர்ந்தர் ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தேர்தல் சமயங்களில் அமைச்சர் துரைமுருகன் இந்த இரண்டு வாக்குறுதிகளை கூறியிருந்ததும், காட்பாடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் இவ்விரண்டு கோரிக்கைகள் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.



விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ”காட்பாடியில் உப்புத்தண்ணி என்பதால் யாரும் பொண்ணு கொடுக்க மாட்டார்கள். முதலில் பாலாற்று நீரை கொண்டு வந்தேன், பிறகு காவிரி நீரை கொண்டு வந்துள்ளேன், காவேரி நீர் கிடைக்காத இடங்களுக்கு விரைவில் கொண்டுவரப்படும். வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பொன்னை ஆறு, மேல்பாடி பாலம் கட்ட பணம் ஒதுக்கிவிட்டேன், விரைவில் அதற்கும் அடிக்கல் நாட்டப்படும். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் 60 படுக்கை ஒதுக்கியுள்ளேன் அடுத்த ஆண்டுக்குள் 100 படுக்கை கொண்டு வந்து மேம்படுத்தி அணைத்து வசதிகளும் கொண்டுவரப்படும். தமிழக பட்ஜெட்டுக்கு பிறகு முதல்வர் இடத்தில் பேசி இந்த ஆண்டுக்குள் இதே சேர்காடு பகுதாயில் ஒரு சிப்காட் கொண்டுவரப்போகிறேன். அதேபோல் கலைஞர் கருணாநிதி வாங்கி வைத்த 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த 100 ஏக்கரில் IT பார்க் டெல் தொழிற்சாலைக்கு அருகே கொண்டு வருவேன். என்னால் முடிந்ததை இந்த தொகுதிக்கு தொடர்ந்து செய்வேன். இந்த அரசு கலை கல்லூரி கட்டிடம் விரைவாக கட்டப்படும், அதற்கு முன் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்படும். மாடல் சிட்டியாக சேர்காடு மாற்ற வேண்டும் என்பது எனது கனவு என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.



 


முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசுகையில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 20 மாதத்தில் புதியதாக 31 அரசு கல்லூரி அமைக்க ஆணையிட்டுள்ளது அரசு இது இந்தியாவில் எந்த மாநிலங்களில் நடக்காத ஒன்று. பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்களைக் காட்டிலும் அதிகம் பெண்களே உயர் கல்வி பயின்று வருகிறார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சி” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.