ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ராம்சரணுடன்  இணைந்து  தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  


விருதுகளை குவிக்கும் ஆர்.ஆர்.ஆர்.


கடந்தாண்டு மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார்.


வசூலில் சாதனைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் அடுத்தடுத்து பல விருதுகளை குவித்து வருகிறது. சமீபத்தில் கூட அப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. 


ராம்சரண் - ஆனந்த் மஹிந்திரா ஆட்டம்:


அதேசமயம் ஆஸ்கர் விருதுக்கு  சிறந்த இயக்குநர் (ராஜமெளலி),  சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த படத்தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த  தயாரிப்பு வடிவமைப்பு (சாபு சிரில்),  சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த  சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்)  ஆகிய பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் பரிந்துரைக்கப்பட்டது. 






இதில் நாட்டு நாட்டு பாடல் மட்டும் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றது. மார்ச்  12 ஆம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படம் விருது பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்  ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரணை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நாட்டு நாட்டு பாடலில் இடம்பெற்ற பேமஸான நடன அசைவுகளை எப்படி ஆட வேண்டும் என கற்றுக்கொண்டார். 


இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, நாட்டு நாட்டு பாடலின் அடிப்படை ஸ்டெப்பை கற்று தந்ததற்கு நன்றி ராம்சரண். ஆஸ்கர் வெல்ல வாழ்த்துக்கள் நண்பா என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள, நீங்கள் என்னைவிட அந்த நடன அசைவுகளை வேகமாக கற்றுக் கொண்டீர்கள். உங்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.